இந்த குருமா பொதுவாக சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை இவற்றுக்கெல்லாம் ஒரு நல்ல சைடிஷ். இதில் காய் சேர்த்த குருமா, தக்காளி குருமா, முட்டை குருமா, கறி குருமா இப்படி குருமாவிலே பல வகைகள் உள்ளது. அதே போல் பருப்பை வைத்து சாம்பார், கூட்டு போன்றவைகளை தான் நாம் இதுவரையில் சாப்பிட்டிருப்போம். ஆனால் பருப்பை வைத்து குருமா செய்ய முடியுமா, அப்படி செய்தால் இட்லி, பூரி, சப்பாத்தி போன்றவைகளுக்கு ருசியாக இருக்குமா, அதெல்லாம் சந்தேகமே வேண்டாம். இதன் சுவை மிகவும் நன்றாகவே இருக்கும். சப்பாத்தி போன்றவைகளுக்கெல்லாம் பருப்பை வைத்து செய்யப்படும் தால் போன்றவைகளை காட்டிலும் இந்த குருமா மிகவும் ருசியாகவும் அதே நேரத்தில் இதை செய்ய பத்து நிமிடம் கூட ஆகாது. அவ்வளவு எளிதாக செய்யக்கூடிய வகையில் இந்த பாசிப்பருப்பு குருமா இருக்கும். ரெசிபியை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருள்கள்: பாசிப்பருப்பு – 1 கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2 ,தேங்காய் – 1/4 கப், பச்சை மிளகாய் – 4, பூண்டு பல் – 4, இஞ்சி – 1 துண்டு, ஏலக்காய் -2, லவங்கம் – 2, பட்டை- 1, முந்திரி-5, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – 1/4 டிஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, சோம்பு – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.
முதலில் பாசிப்பருப்பை கழுவி ஒரு ஐந்து நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துக் வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்த உடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி வதங்கியவுடன் ஊற வைத்திருக்கும் பாசிப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து விடுங்கள். ஒரு ஐந்து விசில் வரும் வரை காத்திருந்து பிறகு குக்கரை இறக்கி வைத்து விடுங்கள்.
இப்போது இந்த குருமாவிற்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்வோம்.
மசாலா அரைக்க, தேங்காய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, கறி மசாலா வகைகள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக மை போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.(முந்திரிக்கு பதிலாக பாதாம் பருப்பையும் சேர்த்து கொள்ளலாம்).
இதை வேக வைத்த பருப்பில் ஊற்றி நன்றாக கலந்து அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைத்து குருமாவிற்கு தேவையான உப்பு சேர்த்து தேங்காய் பச்சை வாடை போகும் அளவிற்கு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் மேலே கொத்துமல்லி தழைகளையும் தூவி இறக்கி விடுங்கள். அட்டகாசமான சுவையில் பாசிப்பருப்பு குருமா தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: வெறும் 1 நிமிடத்தில் ஊறுகாயா! அதுவும் கொத்தமல்லி தழையை வைத்தா? இந்த ரெசிபி பழைய பாட்டிகளுக்கு மட்டும் தான் தெரியும். நீங்க மிஸ் பண்ணிடாதீங்க.
இந்த குருமா சப்பாத்தி, பூரி, பரோட்டா, இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற ஒரு நல்ல சைடிஷ். இது சாதத்திற்கும் நன்றாவே இருக்கும்.