செல்வ வளம் பெறுக உதவும் கனகதார ஸ்தோத்திரம்

mahalakshmil

நம் வீட்டில் காலையில் விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடும்போது இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி மஹாலக்ஷ்மியை வழிபட்டால் நம் வீட்டில் உள்ள கஷ்டங்கள் யாவும் நீங்கி செல்வ வளம் பெருகும். தினமும் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலாவது இந்த மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியை வழிபட வேண்டும். உங்களுக்காக கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில் இதோ!

Aadhi sankarar

கனகதார ஸ்தோத்திரம் தமிழில்
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன்
நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!

மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னி டத்தில் வைத்தனை என் றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே! 1

நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டு
நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு
கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு
கொஞ்சிடும், பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!

ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்
என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று
ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு
அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத் தாயே! 2

- Advertisement -

நற்குடிப் பிறந்த பெண்கள் நாயகன் தனைப்பார்த் தாலும்
நாணத்தால் முகம்பு தைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்!
பற்பல நினைத்த போதும் பாதிக்கண் திறந்து மூடி
பரம்பரைப் பெருமை காப்பார்! பாற்கடல் அமுதே! நீயும்

அற்புத விழிக ளாலே அச்சுத முகுந்தன் மேனி
அப்படிக் காண்ப துண்டு ஆனந்தம் கொள்வ துண்டு!
இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே!
இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே! 3

மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை
மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்
அதிசய நீல மாலை அன் னநின் விழிகள் கண்டு
அண்ணலும் காலந் தோறும் ஆனந்தம் கொள்வ துண்டு!

பதுமநேர் முகத்தி னாளே! பதுமத்தில் உறையும் செல்வி!
பாற்கடல் மயக்கும் கண்ணை பதியின்மேற் பாய்ந்த கண்ணை
பேர்த்தெடுத் தென்மேல் வைத்தால் பிழைப்பன்யான் அருள்செய் வாயே,
பேரருள் ஒருங்கே கொண்ட பிழையிலாக் கமலத் தாயே! 4

கைடப அரக்கன் தன்னை கடிந்தநின் கணவன் மார்பு
கார்முகில் அன்னத் தோன்றி கருணைநீர் பொழியுங் காலை,
மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!
மயக்குவன் திருமால்; பின்னர் மகிழ்வன்நின் விழிதா னென்று!

செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்
திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்!
கொய்தெடு விழியை என்மேல் கொண்டுவந் தருள்செய் வாயே
கொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே! 5

போரினில் அரக்கர் கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை
போரின்றிக் குருதி யின்றிப் புறங்காணத் துடித்து வந்த
மாரனை ஊக்கு வித்த வாளெது கமல நங்காய்?
மங்கை நின் விழிக ளன்றோ! மாலவன் தன்னை வென்ற

தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்ட தாலே
திருமலை வேங்க டேசன் திறத்தினை வென்றான் அன்றோ!
கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்
கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே! 6

’மந்திரம் உரைத்தாற் போதும் மலரடி தொழுதாற் போதும்’
மாந்தருக்(கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்!

சந்திர வதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்
தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்க மாகும்!
எந்தவோர் பதவி வேட்டேன் எளியனுக்(கு) அருள்செய் வாயே!
இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே! 7

எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்ம சாந்தி?
இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி?
தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்!
தவமெனும் முயற்சி யாலே பவவினை தணிந்து போகும்!

அத்தனை முயற்சி என்ன அண்ணல்மா தேவி கண்ணில்
அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும்!
இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே!
இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் நீயே! 8

நீருண்ட மேகக் கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்;
நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!
சீர்கொண்ட அமுதச் செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்
சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வ தைப்போல்

வேர்கொண்ட பாவ மேனும் வினைகொண்ட பாவ மேனும்
வேய்கொண்ட தோளி னாய்உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!
தேர்கோண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவி யாலே
திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத் தாயே! 9

ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி!
அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி!
ஆக்கலில் வாணி யாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்;
அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்!

தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக
திரிபுரம் ஏழு லோகம் திருவருள் புரிந்து நிற்பாய்!
வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே!
வளமென இரப்போர்க் கெல்லாம் வந்தருள் புரிகின் றாயே! 10

வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி!
சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி!
கோதைப்பண் புடையாய் போற்றி! குளிர்ந்தமா மழையே போற்றி!
ஓர்தத்து வத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி!

பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி!
நாதத்து நெடியோன் கொண்ட நங்கைநீ போற்றி! போற்றி!
பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி! போற்றி!
மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி! போற்றி! 11

அன் றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி!
அலைகடல் அமுத மாக அவதரித் தெழுந்தாய் போற்றி!
குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி!
குளிர்ந்தமா மதியி னோடும் குடிவந்த உறவே போற்றி!

மன்றத்து வேங்க டேசன் மனங்கவர் மலரே போற்றி!
மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி!
என்றைக்கும் நீங்கா தாக இருக்கின்ற திருவே போற்றி!
எளியவன் வணங்கு கின்றேன் இன்னருள் போற்றி! போற்றி! 12

தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி!
தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி!
தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி!
தாமரைக் கண்ணான் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி!

தாமரை போல வந்த தவமுனி தேவர்க் கெல்லாம்
தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி!
தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி!
தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி! போற்றி! 13

பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி!
பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி!
தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி!
தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ! போற்றி!

சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி!
ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி!
பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி!
பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி! 14

கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி!
கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி!
மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி!
மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி!

விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி!
விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி!
எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி!
இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி! 15

மைவழிக் குவளைக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி!
வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி!
மெய்விழி செவிவாய் நாசி விழைத்திடும் இன்பம் போற்றி!
விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி!

கைநிறை செல்வம் யாவும் கடைக்கண்ணால் அருள்வாய் போற்றி!
காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி!
செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி!
சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி! போற்றி! 16

மோகனன் துணையே போற்றி! முழுநில வடிவே போற்றி!
மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி!
தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி!
தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி!

ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி!
ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி!
தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி!
தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி! போற்றி! 17

கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி!
காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி!
வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி!
வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி!

பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி!
பணிபவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி!
விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி!
வேயிறு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி! 18

மண்டலத் திசைகள் தோறும் மதகிரி குடங்கள் ஏந்தி
மங்கைக்கு நன்னீ ராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்தி,
தண்டலைக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி,
தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி,

மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூய்மை நல்கி
மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்
அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே!
அரிதுயில் கொள்ளும் காலை அடியவன் வணங்கு கின்றேன்! 19

பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே!
பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வி!
ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையான் ஒருவ னேதான்
இவனுனை இரந்த நிற்க இதுவொரு நியாயம் போதும்!

தாவுநீர்க் கடலைப் போல தண்ணருள் அலைகள் பொங்கும்
சந்திரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடை பூங்கோ தாய்,நின்
மின் னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி! 20

முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி!
மூவிரண் டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்த மாக
அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி
ஆனந்தத் தெய்வ மாதா அரும்பெறல் அன்னை பேரில்

இப்பொழு துரைத்த பாடல் எவரெங்கு பாடி னாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்;
நற்பெரும் பேறும் கிட்டும்! நன்னிலை வளரும்; என்றும்
நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை! 21

கனகதாரா ஸ்தோத்திரம் – வடமொழியில்

அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
மங்கல தேவதாயா: 1

முக்தா முஹீர்விதததீ
வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ
மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது
ஸாகர ஸம்பவாயா: 2

ஆமீலிதாட்ச மதிகம்ய
முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ
மனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக
பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம
பூஜங்க சயாங்கனாயா 3

பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி
விபாதி
காமப்ரதா பகவதோபி
கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே
கமலாலயாயா: 4

காலாம்புதாலி லலிதோரஸி
கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா
தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது
பார்கவநந்தனாயா: 5

Mahalakshmi

ப்ராப்தம் பதம் ப்ரதமத:
கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி
மன் மதேன
மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6

விச்வாம ரேந்த்ர பதவீ
ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம்
முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர
மிந்திராயா 7

இஷ்டா விசிஷ்ட மதயோபி
யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப
பதம் ஸ லபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட
மம புஷ்கர விஷ்டராயா 8

தத்யாத் தயானுபவனோ
த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய
சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ
நயனாம் புவாஹ: 9

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக
குரோஸ்தருண்யை! 10

ஸ்ருத்யை நமோஸ்து
சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய
குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து
சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து
புருஷோத்தம வல்லபாயை 11

நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
நந்தனானி
ஸாம்ராஜ்யதான
விபவானி ஸரோருஹாணி
த்வத் வந்தனானி துரிதா
ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம்
கலயந்து மான்யே 16

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

ஸரஸிஜ நிலயே ஸரோஜ
ஹஸ்தே
தவல தராம்சுக
கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே
மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி
ப்ரஸீத மஹ்யம் 18

திக்தஸ்திபி கனக கும்ப
முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு
ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம்
ஜனனீம் அக்ஷே
லோகாதி நாதக்ரு ஹிணீம்
அம்ருதாப்தி புத்ரீம் 19

கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

laksh vina

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா 21

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு வற்றாத பண வரவு உண்டாகச் செய்யும் சக்தி வாய்ந்த மந்திரம்

இது போன்ற மந்திரம் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanagathara sothiram in Tamil. kanagathara sothiram in Tamil. Kanagathara sosthram, slokam in Tamil.