- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகந்த சஷ்டி விரத நிறைவு நாள் பூஜை

கந்த சஷ்டி விரத நிறைவு நாள் பூஜை

- Advertisement -

வருடா வருடம் வரக்கூடிய கந்தசஷ்டி விரத நாட்களில் சூரனை வதம் செய்த நாளாக கந்தசஷ்டி விதத்தில் ஆறாம் நாள் திகழ்கிறது. அந்த நாளை தான் நாம் சூரசம்காரம் நாள் என்று கூறுகிறோம். அதற்கு மறுநாள் அதாவது கந்த சஷ்டி விரதத்தின் ஏழாவது நாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த திருக்கல்யாண வைபவத்துடன் தான் கந்த சஷ்டி விரதம் பூர்த்தியடையும் என்று கூறப்படுகிறது. அப்படி பூர்த்தியடைய கூடிய நாளில் நாம் செய்ய வேண்டிய பூஜை முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கந்த சஷ்டி விரத நிறைவு நாள் பூஜை

கந்த சஷ்டி விரதம் தொடங்கிய முதல் நாளிலிருந்து விரதம் இருந்து சூரசம்காரத்தை பார்த்து மறுநாள் திருக்கல்யாண தரிசனத்தையும் செய்துவிட்டு விரதத்தை விடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ சூரசம்கார நாள் அன்று மட்டும் விரதம் இருந்து அன்றே விரதத்தை நிறைவு செய்வார்கள் அல்லது மறுநாள் திருக்கல்யாணத்தை பார்த்த பிறகு நிறைவு செய்வார்கள். தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரதத்தை கடைப்பிடிப்பார்கள். விரதம் இருப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட எந்த அளவிற்கு நாம் முழுமனதோடு முருகனை வழிபாடு செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் முருகனின் அருளை பெறுவதற்கு நிறைவு நாள் பூஜை செய்யும் முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக அறுபடை வீடுகளை தவிர்த்து முருகன் ஆலயம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சூரசம்கார நிகழ்வு என்பது நடைபெறும். அதேபோல் அதன் தொடர்ச்சியாக மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு நேரத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் என்பதால் நிறைவு நாள் பூஜை செய்ய விரும்புபவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் எப்பொழுது திருக்கல்யாணம் என்பதை தெரிந்து கொண்டு அந்த நேரத்திற்கு சென்று திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பிறகு வீடு திரும்பி வந்து பூஜை செய்து விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அப்படி அருகில் முருகனின் ஆலயத்திற்கு செல்ல இயலாது என்பவர்களோ எந்த நேரத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் என்பதை தெரியாது என்பவர்களோ அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவு நாள் பூஜையை செய்யலாம். முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக சற்கோண கோலம் போட்டு இருப்போம் அல்லவா அதில் நிறைவு நாளான கந்த சஷ்டியின் ஏழாம் நாளும் நாம் ஆறு நெய் தீபங்களை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைக்க வேண்டும். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு நம்மால் இயன்ற அளவு வடை பாயாசம் போன்ற பலவிதமான நெய்வேத்தியங்களை செய்து வைத்து படைக்க வேண்டும். இந்த நெய்வேத்தியத்தில் கண்டிப்பாக முறையில் தயிர் சாதம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

- Advertisement -

வாசனை மிகுந்த மலர்களை முருகப்பெருமானுக்கு சாற்றி முருகப்பெருமானின் மந்திரமான “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு நெய்வேத்தியத்தை எடுத்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்து தாமும் உண்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

கந்த சஷ்டி விரதத்தை ஆரம்பித்தவர்கள் பலரும் தங்கள் கையில் காப்பு அணிந்திருப்பார்கள், ஒரு சிலர் தங்களுடைய வீட்டில் கலசம் வைத்திருப்பார்கள், இன்னும் சிலரோ:வேல் மற்றும் முருகனின் சிலை, படம் போன்றவற்றை மனைப் பலகையில் வைத்து வழிபாடு செய்திருப்பார்கள். அப்படி செய்தவர்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை இவை அனைத்தையும் கலைத்து எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் கந்த சஷ்டி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிப்பாட்டு முறையை கந்த சஷ்டி விரதத்தின் நிறைவு நாள் அன்று நாம் செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்