அருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்

kanipakkam-vinayagar
- Advertisement -

வாழ்க்கை என்பதே பலவகையான அனுபவங்கள் நிறைந்ததாகவே இருக்கும். இதில் நாம் செய்கிற ஒவ்வொரு செயல்களையும் மற்ற மனிதர்கள் யாரும் கவனிக்கிறார்களோ இல்லையோ இறைவன் நிச்சயம் கவனிக்கிறார். ஆயினும் சிலர் அந்த இறைவனையே ஏமாற்றிவிடலாம் என்று எண்ணுகின்றனர். அப்படிப்பட்ட நபர்களை கடுமையாக தண்டித்து நீதியை நிலைநாட்டும் இறைவனாக ஆந்திர மாநிலத்தின் “காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்” இருக்கிறார். இந்த காணிப்பாக்கம் விநாயகர் கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் வரலாறு

மிகவும் பழமையான ஒரு கோயிலாக இந்த காணிப்பாக்கம் விநாயகர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் முக்கிய இறைவனான வரசித்தி விநாயகர் சுயம்பு வடிவானவர் என்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். முற்காலத்தில் இப்பகுதியில் மூன்று சகோதர்கள் வாழ்ந்து வந்தனர். இதில் ஒருவருக்கு காது கேட்கும் திறன் மிகவும் குறைவு, ஒருவர் கண்பார்வையற்றவர், மற்றொருவர் பேச்சு திறன் இழந்தவர். இவர்கள் மூவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழில் செய்து வந்தனர்.

- Advertisement -

ஒரு முறை சகோதரர்கள் தங்களின் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வரி இரைத்து கொண்டிருந்த போது, தண்ணீர் மிகவும் வற்றி விட்டதால், கிணற்றுக்குள் இறங்கி தோண்ட ஆரம்பித்தனர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. அங்கு மண்ணை விலக்கி பார்த்த போது விநாயகரின் சுயம்பு சிலை இருந்தது. இதை கண்ட அந்த சகோதரர்களும் ஊர் மக்களும் சேர்ந்து அந்த விநாயகர் சிலையை மேலே எடுக்க முயன்று அது முடியாமல் போக ஏராளமான இளநீரை கொண்டு அக்கிணற்றில் இருந்த விநாயகர் சிலைக்கு அபிஷேகம் செய்த போது, கிணறு நிறைந்து அந்த இளநீர் அருகிலிருந்த காணி நிலத்தில் பாய்ந்தோடிய காரணத்தால் இவ்வூருக்கு காணிப்பாக்கம் என்கிற பெயர் உண்டானது. இவை நடந்து மிக நீண்ட காலத்திற்கு பிறகே இக்கோயிலை குலோதுங்க சோழன் கட்டியதாக கோயில் கல்வெட்டுகள் கூறுகிறது. விஜயநகர அரசர்களும் இந்த கோயிலை நன்கு புனரமைத்து கட்டியிருக்கின்றனர்.

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் சிறப்புக்கள்

காணிப்பாக்கம் விநாயகர் பெருமானை ஆந்திர மாநில மக்கள் தங்களின் நீதி தேவனாக கருதி வழிபடுகின்றனர். இதற்கு காரணம் இக்கோயிலில் தினமும் மாலை சத்திய பிரமாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிறரிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், ஆண் – பெண்ணை காதலித்து ஏமாற்றியவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விநாயகருக்கு முன்பாக தாங்கள் எத்தகைய தீமையான செயல்களையும் செய்யவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். பொய் சத்தியம் செய்பவர்கள் காணிப்பாக்கம் விநாயகரால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது இங்கு வரும் பக்தர்கள் பலரின் அனுபவமாக இருக்கிறது.

- Advertisement -

vinayagar

நீண்ட காலம் நோய் பாதிப்புகள் கொண்டவர்கள், கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனைகள், கொடுத்த கடன் தொகைகள் மீண்டும் தங்களுக்கு வந்து சேரவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும் விநாயக பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறியதாக பக்தர்கள் பலர் கூறுகின்றனர். பாலபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

kanipakkam

மேலும் பிறந்த குழந்தைக்கு சோறூட்டுதல், பெயர் சூட்டுதல் போன்ற சடங்குகளையும் கட்டணம் செலுத்தி பக்தர்கள் பலர் இக்கோயிலில் மேற்கொள்கின்றனர். இக்கோயிலில் நாகர் சந்நிதியும் உள்ளது. இங்கு பூஜை செய்து வழிபட்டால் நாக தோஷம் நீங்குகிறது. ஆந்திர மாநில மக்கள் அதிகளவில் வந்து வழிபடும் ஒரு கோயிலாக காணிப்பாக்கம் விநாயகர் கோயில் இருக்கிறது.

- Advertisement -

கோயில் அமைவிடம்

அருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதிக்கு சற்று தொலைவில் அமைந்திருக்கும் காணிப்பாக்கம் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. காணிப்பாக்கம் செல்வதற்கு திருப்பதி நகரிலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது.

கோயில் முகவரி

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்
காணிப்பாக்கம்
சித்தூர் மாவட்டம் – 517 131
ஆந்திர பிரதேசம்

கோயில் தொலைபேசி எண்

8573 – 281 540

8573 – 281 640

8573 – 281 747

இதையும் படிக்கலாமே:
பணபுரீஸ்வரர் திருக்கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have kanipakam varasiddhi vinayaka temple history in Tamil. Vinayakar kovil varalaru or history in Tamil. Vinayakar kovil, address, contact number also here.

- Advertisement -