கார தோசை | Kara Dosai Recipe in Tamil
பெண்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சமையல் வேலைகளை சீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று தான் யோசிப்பார்கள். சட்டென்று ஏதாவது செய்து கொடுத்து அடுத்த வேலையை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாகவே இருக்கும். ஒரே ஒரு நிமிடம் போதும். சூப்பரான ஒரு கார தோசை தயார் செய்து விடலாம். வாங்க அது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை
முதலில் இந்த கார தோசை செய்வதற்கு தேவையான சட்னியை அரைத்துக் கொள்வோம். அதற்கு 10 சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் 1 பெரிய வெங்காயத்தை நல்ல பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சின்ன நெல்லிக்காய் அளவு புளி,1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல், அதற்கு பதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்தெடுத்த சட்னியை ஒரு பவுல் மாற்றி பிறகு மறுபடியும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து விட்டால் சட்னி தயார்.
இந்த சட்னியை தாளித்து ஊற்றி அப்படியே சுடச்சுட இட்லியோடு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதே சட்னி வைத்து இப்போது நாம் கார தோசை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இப்போது அடுப்பு பற்ற வைத்து தோசைக் கல்லை வைத்து கல் சூடானவுடன் தோசை மாவை எடுத்து நல்ல மெலிதாக தோசை ஊற்றிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அரைத்து வைத்த இந்த சட்னியை 2 ஸ்பூன் எடுத்து தோசை மீது நன்றாக தேய்த்து விடுங்கள்.
இதற்கு மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மேலே கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயே சேர்த்துக் கொள்ளுங்கள். தோசை ஒரு புறம் வெந்து வந்தவுடன், திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடலாம். அவ்வளவு தான் சுடச்சுட முட்டை கார தோசை தயார். முட்டை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் இதை மட்டும் தவிர்த்து விடுங்கள்.
இந்த சட்னியை அரைக்க ஒரு நிமிடம் கூட ஆகாது. அதே நேரத்தில் வீட்டில் மாவு இருந்தால் போதும். இந்த சட்னியை வைத்தே அருமையான ஒரு இந்த தோசையை தயார் செய்து விடலாம். இதற்கு சைடுடிஷ் எதுவும் தேவையே இல்லை.
இதையும் படிக்கலாமே: இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சுட சுட சாதம், எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி பஞ்சாபி ஸ்டைல் பச்சை பயிறு கிரேவி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்களேன்!
இதை சமைக்கவே தெரியாதவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை அனைவரும் செய்ய கூடிய சுலபமான ஒரு ரெசிபி தான். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.