கார்த்திகை தீபத்திற்கு பொரி உருண்டையை இப்படி செய்து பாருங்கள். ரொம்ப ரொம்ப ஈஸியா மொறுமொறு பொரி உருண்டைகள் 15 நிமிடத்தில் தயாராகிவிடும்.

pori-urundai_tamil
- Advertisement -

நிறைய பேர் வீட்டில் கார்த்திகை தீபத்திற்கு நிவேதியமாக இந்த பொரி உருண்டையை செய்வார்கள். வீட்டில் செய்தால் பொரி உருண்டை சரியாக வரவில்லை என்று கடையிலிருந்து வாங்கி வருவார்கள். இந்த முறை வெறும் இரண்டு பொருட்களை வைத்து உங்களுடைய வீட்டில் இப்படி ஒரு பொரி உருண்டையை செய்து பாருங்கள். மொறுமொறுப்பாக சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். மிக மிக எளிமையாக செய்துவிடலாம். கார்த்திகை தீபம் என்று மட்டும் அல்லாமல் மற்ற நேரத்தில் இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் கூட விருப்பமாக சாப்பிடுவார்கள்.

பொரி உருண்டை செய்ய வெல்லம் – 1 கப் என்றால், பொரி – 4 கப் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். 1/2 கப் அளவு தண்ணீர் நமக்கு தேவைப்படும். எந்த கப்பில் வெல்லத்தை அளந்து எடுக்கிறீர்களோ, அதை கப்பில் பொரியையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் கொஞ்சம் அகலமாக குழியாக இருக்கும் வானலியை வைத்து விடுங்கள். அதில் எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தை பொடித்து சேர்த்து 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, கரைத்து ஒரு கொதி கொதிக்க விட்டு வடிகட்டி விட்டு பின்பு பாகு காய்ச்ச வேண்டும். அதில் தூசி இருந்தால் கூட நீங்கிவிடும். இந்தப் பாகு கல்லு பதத்திற்கு நமக்கு வர வேண்டும்.

வெல்லம் நன்றாக கொதித்து பாகு காய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீரை எடுத்து அதில் காய்ந்து கொண்டிருக்கும் வெல்லத்தை இரண்டு சொட்டு எடுத்து போட வேண்டும். வெல்லம் தண்ணீரில் இறுகி விடும். அதை உங்கள் கையால் எடுத்து உருட்டிப் பார்த்தால் கமர்கட்டு போல கட்டியாக கிடைக்க வேண்டும். அந்த பாகு உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் டங் டங் என சத்தம் கேட்க வேண்டும். ஒரு கல்லை தட்டில் போட்டால் எந்த சத்தம் கேட்குமோ, அந்த சத்தம் கேட்கும். அதுவரை அந்த வெல்லத்தை பாகுகாய்ச்சிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பொரி உருண்டை மொறுமொறுப்பாக வரும்.

- Advertisement -

வெல்லம் பாகுபதம் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, எடுத்து வைத்திருக்கும் பொரிய இந்த வெல்லப்பாகில் ஊற்றி கடகடவென கலந்து விட வேண்டும். பொரி வெல்லக் கரைசலில் முழுமையாக கலந்து விட்டதும் அடுப்பை அணைத்து விடுங்கள். அதே கடாயில் இருக்கட்டும் அந்த பொரி. உங்களுடைய கையில் அரிசி மாவு அல்லது கொஞ்சமா எண்ணெய் தடவி, இந்த பொரி சூடாக இருக்கும் போதே, அப்படியே கையில் எடுத்து வேகமாக உருண்டை பிடித்து வைத்து விடுங்கள். அவ்வளவு தான். சூப்பரான மொறு மொறு பொரி உருண்டை தயார். (ஜாக்கிரதை ஆக செய்யுங்கள் கையை சுட்டுக் கொள்ளாமல்.)

உங்கள் கையால் செய்த இந்த பொறி உருண்டையை சுவாமிக்கு வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டியது தான். அதிகபட்சம் 15 நிமிடத்தில் இந்த பொறி உருண்டையை செய்யலாம். இந்த கார்த்திகை தீபத்திற்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. உங்கள் கையாலேயே சுவாமிக்கு நிவேதனம் செய்து வைத்த திருப்தியும் கிடைக்கும்.

- Advertisement -