ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றாலோ அவர்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்றாலோ அவர்களின் வாழ்க்கையில் நன்மைகள் நடைபெற வேண்டும் என்றாலோ குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். எப்படி குலதெய்வ வழிபாடு முக்கியமோ அதேபோல் இஷ்ட தெய்வ வழிபாடும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் இஷ்ட தெய்வமாக இருக்கும். எந்த தெய்வம் இஷ்ட தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தை தினமும் மனதார வழிபாடு செய்யும்பொழுது குலதெய்வ அருளும், இஷ்ட தெய்வ அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்றவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டிய இஷ்ட தெய்வ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு
அவரவர்களுக்கு பிடித்தமான தெய்வம் தான் இஷ்ட தெய்வம் என்று கூறுவோம். ஒரு சிலருக்கு விநாயகரை பிடிக்கும், ஒரு சிலருக்கு அம்மனை பிடிக்கும், ஒரு சிலருக்கு சிவபெருமானை பிடிக்கும், ஒரு சிலருக்கு பெருமாளை பிடிக்கும், ஒரு சிலருக்கு முருகனை பிடிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் ஏதோ ஒரு காரணத்தினால் சிறுவயதில் இருந்தே பிடித்த தெய்வமாக இருப்பார்கள். அப்படிப்பட்ட தெய்வத்தை கார்த்திகை மாதத்தில் எந்த முறையில் வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
கார்த்திகை மாதம் முழுவதும் இந்த முறையில் வழிபாடு செய்து எந்த கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. தினமும் இஷ்ட தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று தங்களால் இயன்ற அளவு இஷ்ட தெய்வத்தை வலம் வர வேண்டும். இந்த மாதம் முடிவதற்குள் 1008 முறை வலம் வந்து விட்டோம் என்றால் நாம் எந்த கோரிக்கை வைத்தோமோ அந்த கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
வலம் வர முடியாது என்பவர்கள் 1008 முறை கையெடுத்து இஷ்ட தெய்வத்தை கைகூப்பி வணங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர்ச்சியாக செய்து வரும் பொழுது இந்த மாதம் முடிவதற்குள்ளேயே 1008 என்று எண்ணிக்கையை நம்மால் தொட்டுவிட முடியும். அடுத்ததாக லட்சார்ச்சனை செய்வது. தங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு அந்த தெய்வத்திற்குரிய பொருட்களை வைத்து இலட்சார்ச்சனை செய்ய வேண்டும்.
வில்வ இலை, துளசி இலை, நவதானியங்களை வைத்து செய்வது அதிலும் குறிப்பாக கோதுமை, பச்சரிசி போன்றவற்றை வைத்து தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அர்ச்சனை செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அதேபோல் மகாலட்சுமி மற்றும் அம்பிகைக்கு லலிதா சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்யும்பொழுதும் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திரும் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று சங்கல்பத்தை வைத்துக்கொண்டு இந்த வழிபாட்டை கார்த்திகை மாதத்தில் ஆரம்பித்து செய்வதன் மூலம் அந்த கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:வேண்டுதலை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு
குலதெய்வத்தின் அருளை பெறுவதைப் போலவே இஷ்ட தெய்வத்தின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைப்பதற்கு கார்த்திகை மாதம் ஒரு பொன்னான மாதம். இந்த மாதத்தை தவறவிடாமல் இந்த முறையில் வழிபாடு செய்து வேண்டிய வரத்தை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.