ஒரே மாதிரியான வடை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? இப்படி ஒரு தெய்வீகமான வடையை முயற்சி செய்து பாருங்கள்! அப்புறம் அடிக்கடி சுட ஆரம்பிச்சிடுவீங்க.

karthigai-vadai

பொதுவாகவே வடை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு வகையாக முக்கியமான இடத்தை ‘வடை’ பிடித்திருக்கிறது. இந்த வடையை அடிக்கடி சாப்பிட்டால் அலுத்துப் போய் விடும். இதில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வடை சாப்பிடுவதையே நமக்கு பிடிக்காமல் செய்துவிடும். ஒரே மாதிரியான வடையை சுடாமல் ஆரோக்கியம் தரும் புதிதான இந்த வடையை ஒருமுறை செய்து தான் பாருங்களேன். இந்த வடையை கார்த்திகை மாதத்தில் பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் சுட்டப்படுகின்றது. அதனால் இதற்கு கார்த்திகை வடை என்ற பெயரும் உண்டு. அதைத்தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ளப் போகின்றோம்.

muruga

கார்த்திகை மாத வடை சுட தேவையான பொருட்கள்:
தோலுடன் கூடிய முழு உளுத்தம் பருப்பு – 2 கப், கடலைப் பருப்பு – 1/2 கப், பயத்தம் பருப்பு – 1/2 கப், பச்சை மிளகாய் – 10, இஞ்சி – பெரிய துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பெருங்காயம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.

கார்த்திகை வடை செய்முறை விளக்கம்:
தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் இதனை கொண்டு வடை சுடுவது ஆரோக்கியம் தரும். உளுத்தம் பருப்பை முந்தைய நாள் இரவே நன்கு அலசி விட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் வடை சுடுவதற்கு 2 மணிநேரம் முன்பு கடலைப்பருப்பு மற்றும் பயத்தம்பருப்பை ஊறவைத்து தண்ணீரில்லாமல் நன்கு வடித்து ஒரு துணியில் உலர்த்திக் கொள்ளுங்கள்.

karuppu ulunthu

பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஊற வைத்துள்ள தோலுடன் கூடிய உளுத்தம்பருப்பை .அரைவாசி தோல் இருக்கும்படி நன்கு களைந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நறுக்கி வைத்துள்ளவற்றில் பாதி அளவிற்கு மட்டும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். பெருங்காயம் மற்றும் உப்பு போட்டு கரகரவென்று மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து நன்கு நைஸாக அரைபட தேவை இல்லை.

- Advertisement -

பின்னர் இந்த மாவுடன் உலர வைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து மீதமுள்ள இஞ்சி, பச்சை மிளகாய்கள், கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் எப்போதும் போல் வடை சுடுவதற்கு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பால் கவர் போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு வடையாக தட்டி சூடாக இருக்கும் எண்ணெயில் இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். இந்த வடை வேக அதிக நேரம் எடுக்கும் என்பதால் பொறுமையாக சுட்டு எடுக்கவும். இந்த வடையை இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை வெளியில் வைத்து பயன்படுத்தலாம். அவ்வளவு சீக்கிரம் கெட்டு போகாது.

karthigai-vadai1

தோல் இல்லாத உளுத்தம் பருப்பை பயன்படுத்த நினைப்பவர்கள் அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊறினால் போதும். உடனே செய்து விடலாம். கார்த்திகை மாதத்தில் முருகப் பெருமானுக்கு இந்த வடையை நைவேத்தியமாக படைப்பார்கள். இதுவரை முயற்சி செய்து பார்க்காதவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையுடன் கூடிய அட்டகாசமான வடை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

இதையும் படிக்கலாமே
அட, கோதுமையை வெச்சு இந்த ஸ்நேக்ஸ் செய்ய வெறும் 10 நிமிஷம் போதுமே! கோதுமை மாவு கார அப்பம் சுவையாக எப்படி செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.