திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து சாதம்

karuppu ulunthu rice
- Advertisement -

நம்முடைய உணவுப் பொருட்களில் தானியங்களின் பங்களிப்பு என்பது மிகவும் அதிகமாகவே இருக்கிறது. அப்படி நாம் உபயோகப்படுத்தும் தானியங்களின் பயன்களை அறிந்து அதற்கேற்றார் போல் நாம் செய்தோம் என்றால் நம்முடைய ஆரோக்கியம் என்பது வலுப்பெறும். அந்த வகையில் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் உடல்நலத்தையும் பாதுகாக்க கூடிய ஒரு அற்புதமான தானியமாக உளுந்து திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்து மிகவும் நன்மையை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட கருப்பு உளுந்தை வைத்து எப்படி சாதம் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கருப்பு உளுந்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் ஆற்றலை அதிகரிக்க கூடிய வல்லமை பெற்றதாக திகழ்கிறது. மேலும் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளை நீக்கவும் இது உதவுகிறது. ரத்த சோகையை குணப்படுத்தவும், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் இது உதவுகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு இந்த கருப்பு உளுந்தை தருவதன் மூலம் அவர்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் வராது. நீரிழிவு நோயாளிகளுக்கும், இதய நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக திகழ்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • அரிசி – 2 கப்,
  • கருப்பு உளுந்து – 3/4 கப்
  • சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு – 15 பல்
  • தண்ணீர் – 4 கப்
  • தேங்காய் – 1 கப்,
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு உளுந்தை போட்டு நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் சீரகத்தையும் இதே போல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரிசியையும் கருப்பு உளுந்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி மூன்றிலிருந்து நான்கு முறை கழுவ வேண்டும். பிறகு அரை மணி நேரம் இதை ஊற வைத்து விட வேண்டும்.

இப்பொழுது ஒரு குக்கரை எடுத்து ஊற வைத்திருக்கும் அரிசி கருப்பு உளுந்தை அதில் சேர்த்து அதனுடன் வறுத்து வைத்திருக்கும் சீரகம், தோல் உரிக்கப்பட்ட பூண்டு பல், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் இவற்றை சேர்த்து குக்கரை விசில் போட்டு மூடி அடுப்பில் வைத்து விட வேண்டும். மூன்றிலிருந்து நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பிறகு ஆப் செய்து விட வேண்டும்.

- Advertisement -

குக்கர் விசில் போன பிறகு குக்கரை திறந்து சாதத்தை எடுத்து பரிமாறலாம். இந்த சாதத்திற்கு எள்ளு துவையல், புதினா துவையல் போன்றவை மிகவும் சிறப்பாக திகழும். மிகவும் எளிமையான அதே சமயம் சத்து மிகுந்த கருப்பு சாதம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்முறை

திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து சாதத்தை வாரத்திற்கு ஒருமுறை இந்த முறையில் செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தருவதன் மூலம் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் வராமல் பாதுகாக்க முடியும்.

- Advertisement -