முருகனின் திருவுருவ படத்திற்கு கீழோ அல்லது மேலோ “யாமிருக்க பயமேன்” என்னும் வாசகத்தை நாம் பார்த்திருப்போம், படித்திருப்போம். அந்த வார்த்தைக்கு உண்மையாக தான் தன்னுடைய பக்தர்களை காத்துக் கொண்டு இருக்கிறார் முருகப்பெருமான். அதனால்தான் முருகப்பெருமானை பலரும் வழிபாடு செய்கிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் அருளிய மந்திரங்களுக்கு அதிக அளவில் மகத்துவம் இருக்கிறது. அந்த வகையில் இந்த மந்திரத்தை நாம் முழுமனதோடு கூறும் பொழுது முருகப்பெருமானின் அருளால் இழந்த அனைத்தையும் பெற முடியும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகன் மந்திரம்
முருகனுக்கு உகந்த கோவிலாக கருதப்படுவது அறுபடை வீடுகள். இந்த அறுபடை வீடுகளில் மிகவும் முக்கியமான ஒரு வீடாக கருதப்படுவது தான் திருச்செந்தூர். அதுவும் இன்றைய காலத்தில் பலரும் திருச்செந்தூர் சென்று வழிபாடு செய்யாமல் இருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஆலயமாக திருச்செந்தூர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பெயர், புகழ், செல்வம் என்று அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட திருச்செந்தூரில் வீற்றிருக்கக் கூடிய செந்தில் ஆண்டவனை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த மந்திரத்தை அகத்திய மாமுனிவர் எழுதியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அகத்திய மாமுனிவர் என்பவர் முனிவர்களில் தலைசிறந்தவராகவும் சித்தர்களில் முதன்மையானவராகவும் கருதக்கூடியவராக இருக்கிறார். இவர் பல மந்திரங்களை இயற்றினாலும் முருகப்பெருமானுக்கு என்று இவர் ஏற்றிய இந்த ஒரு மந்திரம் நம் வாழ்க்கையில் நாம் இழந்த அனைத்தையும் திரும்ப தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரமாக கருதப்படுகிறது.
இந்த மந்திரத்தை இந்த நேரத்தில்தான் கூற வேண்டும் என்று கிடையாது, இந்த இடத்தில் தான் கூற வேண்டும் என்றும் கிடையாது. மனதாலும் உடலாலும் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். இந்த மந்திரத்தை நாம் முழுமனதோடு திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை நினைத்துக் கொண்டு கூறும் பொழுது அந்த சூழ்நிலையில் நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நம்முடைய இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு வேலும் மயிலும் துணையாக வந்து நம்மை காத்தருளும் என்றும் கூறப்படுகிறது.
நியாயமான முறையில் நாம் சம்பாதித்த அனைத்தையும் இழந்திருந்தாலும் அவை அனைத்தையுமே திருப்பித் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரமாக கருதக்கூடிய இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். குறைந்தபட்சம் ஒருமுறை நிறுத்தி நிதானத்துடன் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை மனதார நினைத்துக் கொண்டு கூறும் பொழுது நம் வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான நிகழ்வுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
“ஓம் முருகா குரு முருகா அருள் முருகா
ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே
சண்முகனே சடாஷ்சரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாகா”
இதையும் படிக்கலாமே:பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம்
இந்த மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கூறுபவர்களுக்கு அவர்கள் இழந்த செல்வங்கள் அனைத்தும் கிடைப்பதோடு அவர்களின் கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.