அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலி அல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த அல்வா ஃபேமஸ். அதே போல் தான் பூசணிக்காயை வைத்து செய்யும் இந்த காசி அல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல் இல்லாமல், இதை செய்வது மிக மிக சுலபம் செலவும் மிகக் குறைவு, நேரமும் குறைவு இப்படி ஒரு ஈஸியான, சுவையான காசி அல்வா ரெசிபியை எப்படி செய்வது தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு
தேவையான பொருட்கள்: வெள்ளை பூசணிக்காய் – 1/2 கிலோ, சர்க்கரை – 150 கிராம்,ஏலக்காய் பொடி -1டீஸ்பூன், முந்திரி – 15, நெய் – 5 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ – 1 பிஞ்ச்.
இந்த அல்வா செய்வதற்கு முதலில் பூசணிக்காயின் மேல் உள்ள தோலை நீக்கி உள்ளிருக்கும் விதைகளையும் எடுத்து விட்டு சதை பகுதிகளை மட்டும் தனியாக எடுத்து காய் சீவும் சீவலில் சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே போல் ஒரு சின்ன பவுலில் வெது வெதுப்பான தண்ணீர் எடுத்துக் குங்குமப்பூவை அதில் போட்டு வைத்து விடுங்கள். குங்குமப்பூவில் உள்ள சாறு அனைத்தும் தண்ணீரில் இறங்கி நல்ல நிறம் மணம் சேர்த்து கிடைக்கும்.
அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது துருவி வைத்து பூசணிக்காயை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு (பூசணிக்காய் வெந்து விட கூடாது) பூசணிக்காவில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். இதை வடிகட்டியில் வடித்தால் தண்ணீர் முழுவதுமாக வராது ஏதாவது ஒரு காட்டன் துணியில் இதை கொட்டி நன்றாக தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான ஒரு வாணலியை வைத்து அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் முந்திரியை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது வாணலியில் இருக்கும் நெய்யிலேயே தண்ணீர் வடித்து வைத்திருக்கும் பூசணிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். பூசணிக்காவில் உள்ள தண்ணீர் மொத்தமும் சுண்டிய பிறகு, சர்க்கரையை அதில் சேர்த்து நன்றாக கிண்டி விட வேண்டும். சர்க்கரையை சேர்த்தவுடன் மறுபடியும் பூசணிக்காய் இளகி வரும்.
ஆனால் நீங்கள் அப்படியே கிளறிக் கொண்டே இருந்தால் சர்க்கரையும், பூசணிக்காவும் நன்றாக இழைந்து அல்வா பாதத்திற்கு வந்து விடும். இப்போது ஏலக்காய் பொடியையும், தண்ணீரில் சேர்த்து வைத்திருக்கும் குங்குமப்பூவையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்ட பிறகு வறுத்து வைத்த முந்திரியும் மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: இந்த ஹக்கா நூடுல்ஸ் சாப்பிட ஹோட்டல் தான் போகணும் என்கிற அவசியமே கிடையாதுங்க, இதோ இதை விட ஈஸியா இந்த நூடுல்ஸ்சை செய்வே முடியாது. வாங்க செய்து தான் பாத்துடுவோமே.
அவ்வளவுதான் சுவையான காசி அல்வா தயாராகி விட்டது இதை செய்ய மொத்தமாக ஒரு அரை மணி நேரம் தான் ஆகும். ஆனால் அட்டகாசமான சுவையில் இந்த ரெசிபி இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த காசி அல்வாவை செய்து பாருங்கள்.