அழகை ஆராதிக்காத நபர்களே இருக்கமாட்டார்கள். அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் பலரும் இந்த உலகில் தான் இருக்கிறார்கள். அதனால் தான் தெருவுக்கு தெரு அழகு நிலையம் என்று உருவாகிவிட்டது. இந்த அழகு நிலையத்திற்கு செல்லாமல் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு நமக்கு ஒரே ஒரு பொருள் இருந்தால் போதும் என்று நினைப்போம் அல்லவா? அந்த ஒரு பொருள் தான் கஸ்தூரி மஞ்சள். கஸ்தூரி மஞ்சளை எந்த வகையில் பயன்படுத்தி என்னென்ன பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
மூன்று மஞ்சள் வகைகள் இருக்கின்றன. விரலி மஞ்சள், குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள். விரலி மஞ்சள் ஆன்மீக ரீதியாகவும் அதே சமயம் சமையலுக்கும் பயன்படுத்துவோம். இதே போல் குண்டு மஞ்சளை நம்முடைய முன்னோர்கள் குளிக்கும் பொழுது உரசி தேய்த்து குளித்து வந்தனர். கஸ்தூரி மஞ்சள் என்பது அழகை பேணிக்காக்க உதவக்கூடிய ஒரு முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. இந்த கஸ்தூரி மஞ்சளை நாம் எந்தெந்த பிரச்சினைகளுக்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
முகம் வெண்மையாக வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளையை எடுத்து ஒரு பௌலில் போட்டு அதனுடன் காய்ச்சாத பசும்பாலை சேர்த்து நன்றாக பேஸ்டாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்கி முகம் வெண்மையாக மாறும்.
முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்க ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன் கடலை மாவு இரண்டையும் சேர்த்து பேஸ்ட் ஆக கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு கைகளால் முகத்தை நன்றாக தேய்த்து கழுவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய முடிகள் அனைத்தும் இந்த பேக்குடன் சேர்ந்து வந்துவிடும்.
முகப்பரு நீங்க மற்றும் முகப்பருக்களின் வடுக்கள் நீங்க கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் துளசி இலை பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக பேஸ்டாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதம் தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்கள் வராமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் மறையும்.
முகச்சுருக்கம் நீங்க கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் ஆக தயார் செய்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளித்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற வீதம் செய்து வர முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: இளமையான முகத்தோற்றத்தைப் பெற
இது மட்டுமல்லாமல் இன்னும் பல அழகு குறிப்புகள் இந்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி நம்மால் செய்ய முடியும் என்பதால் தேவையற்ற கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்தாமல் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த கஸ்தூரி மஞ்சளை நம்முடைய வரப்பிரசாதமாக நினைத்து பயன்படுத்தி பலனடைவோம்.