5 நிமிடத்தில் ‘பாரம்பரிய கீரை கடையல்’ எப்படி செய்வது? கீரையும், பூண்டும் இருந்தா போதும் வேற எதுவுமே தேவையில்லை!

keerai-kadayal4

கீரை கடையல் என்பது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முறையில் செய்வது உண்டு. ஆனால் பாரம்பரிய முறையில் கீரையைக் கடைவதற்கு வெங்காயம், தக்காளி என்று எதுவும் சேர்ப்பது கிடையாது. கீரையில் இருக்கும் சத்துக்கள் மனிதனை மேலும் பலப்படுத்துகிறது. அதனால் தான் தினமும் உணவில் ஒரு கீரை சேர்த்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவார்கள். எந்த காய்கறியும் சேர்க்காமல், பருப்பும் சேர்க்காமல் பாட்டி காலத்து கீரை கடைசலை பார்க்கப் போகிறோம். எந்த கீரை வகையாக இருந்தாலும் அதை பாரம்பரிய முறையில் சுவையான கடையலாக எப்படி செய்யலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

vendhaya-keerai

‘கீரை கடையல்’ செய்ய தேவையான பொருட்கள்:
கீரை – ஒரு கட்டு
பூண்டு – ஏழு பற்கள்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவிற்கு

தாளிக்க:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
வர மிளகாய் – நான்கு

keerai-kadayal1

‘கீரை கடையல்’ செய்முறை விளக்கம்:
முதலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த கீரை வகையாக இருந்தாலும் அதனை குறைந்தது மூன்றிலிருந்து நான்கு முறை நன்கு தண்ணீரில் அலச வேண்டும். கீரையை ஆயும் பொழுதே ஓட்டைகள் இருக்கும் கீரைகளை அகற்றி விடுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கரில் கீரைகளை போட்டு அதனுடன் தோல் உரித்து வைத்துள்ள ஏழு பூண்டு பற்களை போடுங்கள். ஏழு என்பது எண்ணிக்கைக்காக சொல்லப்படுவது. கீரை கட்டுக்கு ஏற்ப கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து குக்கரில் கொஞ்சம் புளி சேர்த்து, அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். தண்ணீர் அதிகம் சேர்த்தால் கடையல் கெட்டியாக இருக்காது. பின்னர் குக்கரை மூடி வைத்து விடவும். ஆவி வரும் வரை காத்திருந்து பின்னர் விசிலை மாட்டுங்கள். ரெண்டே விசிலில் கீரை நன்கு வெந்துவிடும். கீரையை கடையும் பொழுது தான் உப்பு சேர்க்க வேண்டும். நீங்கள் குக்கரில் போடும் பொழுது உப்பு சேர்த்தால் கீரையின் நிறம் மாறிவிடும். அதிக விசில் வைத்தாலும் கீரையின் நிறம் மாறிவிடும். பச்சை நிறம் அப்படியே மாறாமல் இருக்க இந்த முறையை கையாளுங்கள்.

keerai-kadayal2

பின்னர் மத்து, சட்டி வைத்திருப்பவர்கள் சட்டியில் போட்டு கடையலாம். அப்படி இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் ஒரே ஒரு சுற்று சுற்றி இறக்கி விடுங்கள். மிக்ஸி ஜாரில் சுற்றுவதை விட கரண்டியால் பாத்திரத்திலேயே கடைவது மிகவும் நல்லது. உங்கள் வசதிக்கேற்ப தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கீரையை கடைந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடவும், எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கடுகு போட்டு பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுக்கவும். இறுதியாக காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.

keerai-kadayal3

இதனை அப்படியே கீரையில் ஊற்றி மீண்டும் மத்து வைத்து நன்கு கடைய வேண்டும். அப்போது தான் மிளகாயில் இருக்கும் காரம் கீரையில் இறங்கும். மிக மிக அற்புதமான சுவையில் பாரம்பரிய முறையில் கீரையின் நிறம் மாறாமல் கெட்டியாக கீரை கடையல் தயார். இப்படி கீரையைக் கடைவதால் கீரையில் இருக்கும் சத்துக்களும் வீணாவதில்லை. இதனை செய்யவும் ஐந்து நிமிடம் கூட ஆகாது. மிக விரைவாக செய்து விடலாம். நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்தி விடுங்கள்.