பௌர்ணமி நாள் என்பது அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதால் சந்திர வழிபாட்டை நாம் கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும். வழிபாட்டை செய்கிறோமோ இல்லையோ சந்திர தரிசனத்தை மேற்கொண்டாலே நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சந்திர தரிசனத்திற்கே அவ்வளவு பலன் என்றால் சந்திரனை நினைத்து நாம் பூஜை செய்தோம் என்றால் நமக்கு இன்னும் எவ்வளவு பலன் கிடைக்கும். அந்த வகையில் நாம் கேட்டதை நமக்கு தரக்கூடிய பூஜையை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கேட்டதை கொடுக்கும் பூஜை
பௌர்ணமி நாளன்று நம்மில் பலரும் மகாவிஷ்ணுவிற்கு சத்யநாராயண பூஜையை செய்வதுண்டு. இன்னும் சிலரோ சிவ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதே போல் இன்னும் சிலர் அம்மன் வழிபாட்டையும் மகாலட்சுமி வழிபாட்டியும் மேற்கொள்வார்கள். இப்படி பல தெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்வதோடு சந்திர பகவானையும் நாம் பூஜை செய்தோம் என்றால் சந்திர பகவானிடம் நாம் வைக்கும் வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பூஜை முறையை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை முழு நிலவு வானத்தில் தோன்றிய பிறகுதான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு தாம்பாள தட்டு வேண்டும். அதில் ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரியும் தாமரை தண்டு திரியும் சேர்த்து திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த வழிபாட்டை வெட்டவெளியில் சந்திர பகவானை பார்த்தவாறு தான் செய்ய வேண்டும். தீபம் சந்திர பகவானை நோக்கி எரிய வேண்டும். சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்வதற்காக மல்லிகை பூக்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நெய்வேத்தியமாக பால் பாயாசம், பால், பால்கோவா போன்ற பால் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது சந்திர பகவானையும் இந்த தீபத்தையும் பார்த்தவாறு நமக்கு என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ எது நமக்கு வேண்டும் என்று ஆசை ப்படுகிறோமோ அதை முழு மனதோடு ஆத்மார்த்தமாக நடந்துவிட்டது போல் கற்பனை செய்து சந்திர பகவானிடம் கூற வேண்டும். உதாரணமாக பணத் தேவைகள் பூர்த்தி அடைந்து விட்டது, திருமணம் நடைபெற்று விட்டது, நல்ல வேலை கிடைத்துவிட்டது என்று நம்முடைய கோரிக்கை நிறைவேறியது போல் சந்திர பகவானை பார்த்து ஒன்பது முறை கூற வேண்டும்.
பிறகு மல்லிகை மலர்களை கையில் எடுத்துக்கொண்டு “ஓம் சந்திர பகவானை போற்றி ஓம்” என்று கூறி அந்த அகல் விளக்கிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு 108 முறை கூறி அர்ச்சனை செய்த பிறகு முழு மனதோடு அமைதியாக கண்களை மூடி நம்முடைய வேண்டுதலை மறுபடியும் முன் வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். அர்ச்சனை செய்த மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தூபம் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: எமதர்மன் நடத்திய நாடகம்
மிகவும் எளிமையான இந்த சந்திர பூஜையை யார் ஒருவர் பௌர்ணமி தோறும் செய்கிறார்களோ, அவர்களுக்கு சந்திர பகவானின் பரிபூரண அருளால் அவர்கள் கேட்டது கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.