சிவபெருமானுக்குரிய சிறப்பு மிகுந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் பிரதோஷ நாள். பிரதோஷ நாளன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளோடு மற்ற அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பிரதோஷம் என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வியாழக்கிழமை என்பது தட்சிணாமூர்த்திக்கும் உகந்த கிழமையாக கருதப்படுவதால் அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய சிவ வழிபாடு நாம் கேட்கும் வரத்தை தரும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட சிவ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரதோஷ வழிபாடு
பல அற்புதமான சிறப்பு மிகுந்த நாளாக தான் வியாழக்கிழமை திகழ்கிறது. அன்றைய நாள் குரு பகவானுக்கு உகந்த நாளாகவும் குபேரருக்கும் உகந்த நாளாகவும் அதே சமயம் தக்ஷிணாமூர்த்திக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இப்படி மூன்று தெய்வங்களின் அருளையும் ஒருசேர பெறுவதற்கு வியாழக்கிழமை வழிபாடு என்பது சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. அந்த வியாழக்கிழமை சேர்த்து சிவபெருமானின் அருளை பெறுவதற்குரிய பிரதோஷமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தரக்கூடியதாக திகழும்.
அன்றைய தினம் காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு சிவபெருமானை மனதார நினைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எந்த முறையில் விரதம் இருக்க முடியுமோ அந்த முறையில் விரதம் இருந்து மாலை நேரத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வழிபாடு செய்ய வேண்டும்.
ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் பலரும் தங்களுடைய வீட்டிலேயே சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சரியாக பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் சிவபெருமானின் படம் அல்லது சிலை அல்லது சிவலிங்கம் போன்ற எது இருந்தாலும் அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
சிவபெருமானுக்கு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதுவும் குறிப்பாக மஞ்சள் நிறத்திலான பொருட்களை நெய்வேத்தியமாக வைப்பது கூடுதல் சிறப்பை தரும். பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கையில் கற்கண்டு, வெல்லம், சர்க்கரை போன்ற ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைத்துக்கொண்டு சிவபெருமானின் பின்வரும் இந்த மந்திரத்தை 11 முறை கூற வேண்டும்.
மந்திரம்
“ஓம் மஹா தேவாய வித்மஹே
ருத்ர மூர்த்யே தீமஹி
தந்நோ ப்ரசோதயாத்..”
மந்திரத்தை கூறி முடித்துவிட்டு நமக்கு என்ன வரம் வேண்டுமோ அந்த வரத்தை சிவபெருமானிடம் மனதார கேட்க வேண்டும். பிறகு கையில் இருக்கக்கூடிய கற்கண்டு, வெல்லம் அல்லது சர்க்கரையை நாம் எப்பொழுதும் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் வியாழக்கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும். ஒருவேளை பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய இயலாதவர்கள் இரவு 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:பங்குனி தேய்பிறை பிரதோஷ வழிபாடு
முழு மனதோடு இந்த முறையில் வழிபாடு செய்து வரம் கேட்க சிவபெருமானின் அருளால் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.