நாம் வளர்க்கக்கூடிய வீட்டு விலங்குகளில் இந்த பசுவிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்போம். காரணம் பசு தேவலோகத்தில் வாழக்கூடிய ஒரு உயிரினம். தேவலோகத்தில் வாழக்கூடிய பசுவை, காமதேனு என்று சொல்லுவார்கள். இந்த பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்வதாக ஐதீகம். கேட்ட வரங்களை எல்லாம் அள்ளிக் கொடுக்கக்கூடிய பசுவிற்கு, இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்.
இன்று மாட்டுப் பொங்கல். நம்மில் நிறைய பேர் வீடுகளில் கோமாதா சிலை, காமதேனு சிலை, அல்லது திருவுருவப்படம் பூஜை அறையில் இருக்கும். உங்களுடைய வீட்டில் மாடு வைத்திருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி பூஜை அறையில் இருக்கும் கோமாதா சிலைக்கு கட்டாயம் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் கோமாதா திருவுருவப்படம் வைத்திருந்தாலும் அதற்கு இன்றைய தினம் கட்டாயம் வழிபாடு செய்ய வேண்டும். அந்த சுலபமான வழிபாட்டை எப்படி செய்வது இன்று மாலை பூஜை அறையில் படிக்க வேண்டிய மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இன்றைய தினம் மகாலட்சுமிக்கு உகந்த கற்கண்டு சாதம் செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய இனிப்பு பிரசாதம் மகாலட்சுமிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இல்லையென்றால் பசும்பாலில், பால் பாயாசம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது சௌகரியமோ அந்த நெய்வேத்தியம் தயார் செய்து வீட்டில் இருக்கும் கோமாதாவிற்கு முன்பாக வைத்து நெய்வேதியம் செய்ய வேண்டும்.
வீட்டில் கோமாதாவின் சிலை இருந்தால் கட்டாயம் அதற்கு பால் அபிஷேகம் செய்து சந்தன குங்கும பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றி வைத்து செய்த நெய்வைத்தியத்தை படைத்து விட்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை மனமுருக சொல்லி உதிரி பூக்களால் கோமாதாவிற்கு அர்ச்சனை செய்யவும்.
கோமாதா போற்றி
ஓம் காமதேனுவே போற்றி போற்றி
ஓம் திருமகள் வடிவே போற்றி போற்றி
ஓம் தேவர் உலக பசுவே போற்றி போற்றி
ஓம் பால் சுரப்பவளே போற்றி போற்றி
ஓம் பயம் தீர்ப்பவளே போற்றி போற்றி
ஓம் அமிர்த வாணியே போற்றி போற்றி
108 காமதேனு போற்றிகள் இருக்கிறது. உங்களால் முடியும் என்றால் அந்த 108 போற்றிகளையும் கூகுளில் டைப் செய்து பார்த்து படிக்கலாம் தவறு கிடையாது. முடியாதவர்கள் இந்த போற்றிகளை மட்டும் சொல்லி காமதேனுவை வழிபாடு செய்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு உங்கள் வீட்டில் இருக்கும் பணகஷ்டம் அனைத்தும் தீர வேண்டும் என்று அந்த கோமாதாவிடம் மனநிறைவோடு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இறுதியாக தீப தூவ ஆராதனை காட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். முடிந்தால் வைத்த செய்த இனிப்பு பிரசாதத்தை, வீட்டு பக்கத்தில் கோ சாலை அல்லது பசு வைத்திருப்பவர்களிடம் கொண்டு சென்று, அந்த பிரசாதத்தை பசுவிற்கு சாப்பிட வைக்கலாம். ரொம்ப ரொம்ப நல்லது. வீட்டில் இருப்பவர்களும் அந்த பிரசாதத்தை சாப்பிட்டு கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: மாட்டுப் பொங்கல் அன்று பின்பற்ற வேண்டியவை
கேட்ட வரங்களை எல்லாம் மன நிறைவோடு கொடுக்கக்கூடிய இந்த கோமாதா வழிபாட்டை இன்றைய தினம் மாலை நேரத்தில் வீட்டில் செய்தால் உங்களுடைய பணக்கஷ்டம் அடியோடு நீங்கும். எவ்வளவு பணத் தேவை இருக்கிறதோ அவ்வளவு தேவைக்கும், கை நிறைய வருமானம் வந்து சேரும் என்பது தான் நம்பிக்கை. நம்பிக்கையோடு கோமாதாவை வணங்குவோம். கோடி கோடியாக செல்வ வளங்களை பெறுவோம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.