இன்றைய காலத்தில் பலரும் தங்களுடைய உடல் நிலையில் அக்கறை செலுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகிவிட்டது. உடற்பயிற்சியை எந்த அளவிற்கு மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அதேபோல் நாம் உண்ணக்கூடிய உணவுகளையும் சற்று கூர்ந்து கவனித்து சத்து மிகுந்த உணவுகளாக எடுப்பதன் மூலம் உடல ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அந்த வகையில் பலவிதமான சத்துக்கள் நிறைந்த பொருளாக தான் கொண்டைக்கடலை திகழ்கிறது. இதில் அதிக அளவு புரதச்சத்து, நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பதால் இது பெரியவர்கள் முதல் சிறியவர்களாக வரை கண்டிப்பான முறையில் உண்ண வேண்டிய ஒரு தானியமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட கொண்டைக்கடலையை வைத்து அடை செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 இன்ஞ்
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கருவேப்பிலை – 2 கொத்து
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – 3 இனுக்கு
தயிர் – 1/2 கப்
சின்ன வெங்காயம் நறுக்கியது – 1/2 கப் நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி கழுவி ஆறு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து ஊற வைத்து அந்த தண்ணீரை வடித்து விட்டு கொண்டை கடலையை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அடைக்கு வெள்ளை கொண்டை கடலையை பயன்படுத்துவது கூடுதல் ருசியை தரும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் கொண்டைக்கடலையுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கருவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லி, தயிர் போன்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒருமுறை அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக ஒரு அரைக்க வேண்டும். கொரகொரப்பாக அரைத்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி விடுங்கள். இப்பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அந்த மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாவு அதிகளவில் தண்ணியாகவும் இருக்கக்கூடாது, அதிக அளவில் கெட்டியாகவும் இருக்கக்கூடாது. அடை மாவு பதத்திற்கு பார்த்து அதற்கு தேவையான அளவு மட்டும் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மாவு தயாராகிவிட்டது. அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து அடை சுடுவது போல் ஊற்றி பரப்பிக்கொள்ளுங்கள். பிறகு அதை சுற்றி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வேக விட வேண்டும்.
ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு பிறகு அடை தோசையை திருப்பி போட்டு மறுபுறமும் வேகும் அளவிற்கு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக விட வேண்டும். இரண்டு புறமும் நன்றாக சிவந்த பிறகு அதை எடுத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான ருசியான கொண்டைக்கடலை அடை தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: பாதாம் பிசின் லட்டு செய்முறை
வளரும் குழந்தைகள் கொண்டைக்கடலையை உண்பதன் மூலம் அவர்களுடைய எலும்பு மற்றும் தசை வளர்ச்சி சீராக இருக்கும். வயதானவர்கள் கொண்டைக்கடலையை உண்பதன் மூலம் அவர்களின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு இதய ஆரோக்கியமும் மேம்படும். இவ்வளவு அற்புதமான பலன்களை தரக்கூடிய கொண்டைக்கடலையை நாமும் இப்படி ஒரு முறை செய்து பார்ப்போம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.