காலைல எழுந்து டிபன் பாக்ஸ் கட்டணுமா? 1 கைப்பிடி கொத்தமல்லி மட்டும் இருந்தால் 10 நிமிடத்தில் சுவையான மல்லி சாதம் தயார் செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

- Advertisement -

காலையில் எழுந்ததும் என்னடா டிபன் பாக்ஸில் கட்டி கொடுப்பது? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ஒரு மல்லி சாதம் உபயோகமாக இருக்கும். ருசியான மல்லி சாதம் வித்யாசமான முறையில் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த வெரைட்டி ரைஸ் எப்படி செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் – மூன்று கப், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4, இஞ்சி – ஒரு இன்ச், சீரகம் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – கால் கப், சமையல் எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, முந்திரிப் பருப்பு – 10, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

மல்லி சாதம் செய்வதற்கு முதலில் உதிரி உதிரியாக மூன்று கப் அளவிற்கு சாதத்தை வடித்து தயார் செய்து கொள்ளவும். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கை நிறைய மல்லி தழைகளை நன்கு சுத்தம் செய்து கழுவி உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மல்லித்தழையுடன், உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டுக் கொள்ளுங்கள். ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நைசாக அரைக்க கால் கப் மட்டும் தண்ணீர் ஊற்றி அரையுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இரண்டு வரமிளகாய்களை கிள்ளி போட்டு ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

இவற்றை தாளிப்பு செய்ததும் இதனுடன் நல்ல ஒரு சுவைக்கு முந்திரி பருப்புகளை பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் போல வேர்க்கடலை, பாதாம் போன்ற எந்த நட்ஸ் வகைகளையும் நீங்கள் சேர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:
குக்கரில் கார சட்னியா? அதுவும் வெறும் 10 நிமிடத்தில் கார சட்னியை செய்ய சூப்பர் ஐடியா இதோ உங்களுக்காக.

இவை சிவக்க வறுபட்டதும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு அரைத்து வைத்துள்ள பேஸ்டையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் நன்கு பச்சை வாசம் போக கிண்டி விடுங்கள். பிறகு நீங்கள் உதிரி உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், பத்தே நிமிடத்தில் சுவையான மல்லி சாதம் ரெசிபி ரெடி!

- Advertisement -