இந்தச் சட்னியை இப்படி செஞ்சு பாருங்க! 10 இட்லி, 10 தோசை கூட பத்தாது. வித்தியாசமான முறையில் கொத்தமல்லி சட்னி.

kothamalli-chutney

இட்லி தோசை சப்பாத்தி இவைகளுக்கு தொட்டுக்கொள்ள ஆரோக்கியமாக கொத்தமல்லிச் சட்னியை வித்தியாசமான முறையில் எப்படி அரைப்பது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிரமம் இல்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே ஈஸியான முறையில் இந்த சட்னியை தயார் செய்து கொள்ளலாம். காரசாரமான இந்த சட்னிக்கு எத்தனை இட்லி எத்தனை தோசை சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும், வேண்டும் என்று நம் நாக்கு சட்னியின் சுவையை கேட்கும். இப்போது அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தோல் உரித்த சின்ன வெங்காயம் – 6  சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக தோலுரித்த பூண்டு – 3, பச்சை மிளகாய் – 4, வரமிளகாய் – 1, புளி சிறிய துண்டு, இந்தப் பொருட்கள் அனைத்தையும் 1 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக 2 மீடியம் சைஸ் பழுத்த தக்காளிகளை வெட்டி கடாயில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய உடன், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி கடாயில் போட்டு ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும். இறுதியாக – 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து, கடாயில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக கலந்து அடுப்பை அணைத்து இந்த கலவையை நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

kothamalli-chutney2

ஆரிய இந்த கலவையை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் இருந்து இந்த சட்னியை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் நல்லெண்ணை – 2 ஸ்பூன் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்த்து விடுங்கள். கொத்தமல்லி சட்னி தயார். (கொத்தமல்லி தழையை ஒரு நிமிடம் வரை தான் வதக்க வேண்டும். கொத்தமல்லி தழையின் பச்சை நிறம் அப்படியே சட்னியில் கிடைக்க வேண்டும். மல்லித்தழையை வெகு நேரம் வதக்கி விட்டால் சட்னி நிறம் பச்சை நிறத்தில் வராது.)

kothamalli-chutney1

தேவைப்பட்டால் இந்த சட்னியை வெறும் பச்சை மிளகாயை வைத்தும் அரைக்கலாம், அல்லது வெறும் வரமிளகாயை வைத்து அரைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்தச் சட்னி குறிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் இந்த சட்னியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.