அன்றாட சமையல் தேவைகளுக்கு காய்கறிகள் வாங்கும் பொழுது 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை கொடுத்து கொத்தமல்லி கட்டை வாங்கி வைக்கிறோம். எவ்வளவுதான் பார்த்து பார்த்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தாலும், சீக்கிரமே அழுகி போய்விடுகிறது. பாதி கொத்தமல்லிக்கு மேல் வீணாகத்தான் போகும். ஃபிரஸ்ஸான கொத்தமல்லி மாடி தோட்டத்தில் எப்படி எளிமையாக வளர்க்கலாம்? என்னும் தோட்டக்குறிப்பு சார்ந்த தகவலை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.
பொதுவாக சமையல் செய்து முடித்த பின்பு கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லியை கிள்ளி தூவி இறக்கினால் தான் நமக்கு சமையலில் முழு திருப்தி கிடைக்கிறது. வாசத்திற்காக சேர்க்கும் இந்த கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்திற்கும் பஞ்சம் வைக்கவில்லை. செரிமானத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய கொத்தமல்லியை தினமும் பயன்படுத்த மறக்காதீர்கள். இந்த கொத்தமல்லி தனியா விதைகளில் இருந்து அதாவது மல்லி விதைகளில் இருந்து முளைக்கிறது. இவ்விதைகள் சாதாரண மளிகை கடைகளில் வாங்கி விதைத்தால் பல சமயங்களில் முளைப்பதில்லை. எனவே நர்சரி அல்லது மொத்த விலை கடைகளில் மூட்டைகளில் இருந்து தேவையான அளவிற்கு வாங்கி வாருங்கள்.
வாங்கி வந்த விதைகளை ஒரு கவரில் போட்டு சப்பாத்தி கட்டையால் உருட்டுங்கள். அவை ஒன்றிரண்டாக உடைய வேண்டும். பின்னர் ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஒரு காட்டன் துணியில் போட்டு இறுக்கமாக கட்டி நான்கைந்து நாட்கள் அப்படியே விட்டுவிடுங்கள். லேசாக முளைக்கும், அதன் பிறகு விதைக்க பயன்படுத்துங்கள். ஒரு மண் தொட்டியில் செம்மண், கோக்கோ பீட், மண்புழு உரம், தொழு உரம் ஆகியவற்றை சம அளவில் சேர்த்து அதில் இவ்விதைகளை போட்டு மூடி வையுங்கள்.
வெயில் காலம் என்பதால் நேரடி வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டாம். அதிக வெயிலில் வைத்தால் கருகிப் போய்விடும். மண் எப்போதும் ஈரப்பதமாக இருந்தால் போதுமானது. அதிக அளவிற்கு தண்ணீரை ஊற்றக்கூடாது. லேசாக ஸ்பிரே செய்து ஈர பதத்துடன் தினமும் வைத்துக் கொள்ளுங்கள் போதும். காலையிலும் மாலையிலும் இது போல தண்ணீரை ஸ்பிரே செய்யுங்கள். கொத்தமல்லி வளர்வதற்கு ஒரு மாதத்திற்கு மேலாகும். பூக்கள் பூப்பதற்கு முன்னரே அறுவடை செய்து எடுத்துக் கொள்ளலாம். மல்லி செடியிலிருந்து விதைகள் வருவதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகலாம். ஒருமுறை விதைகள் எடுத்த பின்பு இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் விதைத்து அறுவடைக்கு பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே:
புரியாத பாடங்களை எளிமையாக படிக்க ஆன்மீக குறிப்பு
பூச்சி தொந்தரவுகள் இருந்தால் மீன் அமிலம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். பொதுவாக மல்லி செடிகளில் இலைப்பேன் அல்லது மாவு பூச்சி தொந்தரவுகள் அதிகம் வரும். மல்லி இலைகளை வேரோடு ஒரு பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து போட்டு வைத்தால் சீக்கிரம் அழுகாமல் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும், தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தலாம். அல்லது ஆய்ந்து வைத்த மல்லி இலைகளை கனமான பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை ப்ரஷ்ஷாக இருக்கும். தினமும் சமையலில் மல்லி இலைகளை சேர்த்து ஆரோக்கியமாக இருப்போம்.