கோவிலுக்கு சென்றாலே அங்கு வீசிக்கொண்டிருக்கும் ஒருவித நறுமணம் நம் மனதை அமைதிப்படுத்தும். இந்த மன நிம்மதி கோவிலுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும். எனவே தான் பலரும் தங்கள் மனது குழப்பமாக இருக்கும் பொழுது கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதுபோலத் தான் வீட்டில் செய்யும் உணவுகள் எவ்வளவு ருசியாக இருந்தாலும், கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சில வகையான உணவுகளை சுவை தனி விதமாக இருக்கும். இதன் சுவையை இங்கு மட்டும்தான் ருசிக்க முடியும். ஆனால் இவற்றை எவ்வாறு செய்கிறார்கள் என்னும் ரகசியத்தை மட்டும் தெரிந்துகொண்டால், கோவிலில் கொடுக்கப்படும் அதே சுவையில் வீட்டிலேயும் செய்யலாம். அப்படி மிளகு பொங்கல் செய்ய பின்பற்றப்படும் ஒரு சிறிய ரகசிய குறிப்பை மட்டும் பயன்படுத்தினால் போதும். நீங்கள் செய்யும் மிளகு பொங்கலும் அதே சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – 2 டம்ளர், பாசிப்பருப்பு – ஒரு டம்ளர், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, முந்திரிப்பருப்பு – 15, உப்பு – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை எடுத்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு டம்ளர் பச்சை அரிசி மற்றும் ஒரு டம்ளர் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
பின்னர் இவற்றுடன் 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதனை 10 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும். 10 நிமிடத்திற்குப் பிறகு குக்கரை அடுப்பில் மீது வைக்க வேண்டும். பிறகு இதனுடன் அரை டீஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இஞ்சியின் மீதுள்ள தோலை நீக்கிவிட்டு, அதனை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
அதில் பாதியளவு இஞ்சியை அரிசியுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு குக்கரை மூடி விட வேண்டும். பின்னர் குக்கரில் இருந்து பிரஷர் வர ஆரம்பித்ததும் குக்கர் விசில் போட வேண்டும். குக்கரில் இருந்து நான்கு அல்லது ஐந்து விசில் வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் ,மீதமுள்ள இஞ்சி துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் பெருங்காயத் தூளை தண்ணீரில் கரைத்து, தாளிப்புடன் சேர்க்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியை திறந்து இந்த தாளிப்பு சேர்த்து கலந்து விட்டால் போதும். கமகம வாசத்துடன் கோவில் சுவையில் மிளகு பொங்கல் தயாராகிவிடும்.