கும்பகோணம் ஸ்பெஷல் பாரம்பரியமான முறையில் கடப்பா எப்படி எளிதாக நம் வீட்டிலும் செய்வது? இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள செம டேஸ்டாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க!

kadappa1_tamil
- Advertisement -

கடப்பா செய்வது எப்படி

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் உண்டு அதில் சமையல் கலையில் வித்தியாசமான முறையில் அவரவர் ஊரில் சில பிரசித்தி பெற்ற ரெசிபி வகைகள் இருக்கும். அப்படியான ஒரு வித்தியாசமான கும்பகோணம் கடப்பா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். சிறு பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கடப்பா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லாவற்றுக்குமே சைட் டிஷ் ஆக தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அவ்வளவு டேஸ்டாக இருக்கும் இதை எப்படி செய்வது? என்று இனி பார்ப்போம் வாருங்கள்.

கடப்பா செய்ய தேவையான பொருட்கள்:

சிறு பருப்பு – கால் கப், உருளைக்கிழங்கு – ஒன்று, தேங்காய் துருவல் – அரை கப், பூண்டு பல் – 4, சோம்பு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு இன்ச், பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை – தலா 2, பெரிய வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி பழம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு, மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

கடப்பா செய்முறை விளக்கம்:

கடப்பா செய்வதற்கு முதலில் கால் கப் அளவிற்கு சிறு பருப்பு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் சேர்த்து அதனுடன் ஒரு பெரிய உருளைக்கிழங்கை தோலுடன் நன்கு சுத்தமாக கழுவி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பு நன்கு வெந்திருக்கும் உள்ளே போட்டுள்ள உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கி நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பருப்பையும் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அரைப்பதற்கு மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு, சோம்பு, பொட்டுக்கடலை, கசகசா மற்றும் பச்சை மிளகாய் 3 ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இதனுடன் மீதம் இருக்கும் பச்சை மிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பாதி அளவிற்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். இவை மசிய வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் நீங்கள் கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்க்க வேண்டும். பருப்பை சேர்த்ததும் தேவையான அளவுக்கு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தின்ன தின்ன திகட்டாத தித்திக்கும் லட்டு. இந்த லட்டுவை தினமும் 1 சாப்பிட்டால் திரும்பிப் பார்ப்பதற்குள் முடி, முட்டி கால் வரை வளர்ந்து விடும்.

இப்போது நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்து கடப்பா கெட்டியாக வரும் பொழுது நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்க்க வேண்டும். மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் நன்கு கொதித்து பச்சை வாசம் எல்லாம் நீங்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழையை நறுக்கி தூவிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ரொம்பவே சூப்பராக இருக்கக்கூடிய இந்த கடப்பா சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லாவற்றுக்குமே செம்மையாக இருக்கும். இந்த கும்பகோணம் கடப்பா சட்னியை இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -