நன்மைகள் பல தரும் குங்கும அர்ச்சனை

kunkuma archanai
- Advertisement -

தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. இந்துக்கள் அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பான முறையில் வெள்ளிக்கிழமையாவது விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. மற்ற கிழமைகளில் விளக்கேற்ற வில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் கண்டிப்பான முறையில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு விளக்கு ஏற்றுவார்கள். இதே வெள்ளிக்கிழமை தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் பொழுது மேலும் விசேஷமாக இருக்கும். அப்படி இருக்கக்கூடிய தை முதல் வெள்ளி அன்று குங்குமத்துடன் எந்த பொருட்களை சேர்த்து அம்பாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தெய்வீக பொருட்கள் என்னும் வரிசையில் விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களும் வரும். அவற்றுள் மிகவும் முக்கியமான பொருளாக கருதப்படுவது குங்குமம். விபூதி எப்படி சிவனுக்கு உகந்த பொருளாக கருதப்படுகிறதோ அதேபோல் அம்பாளுக்கு உகந்த பொருளாக குங்குமம் கருதப்படுகிறது. யார் ஒருவர் நெற்றியில் குங்குமம் இருக்கிறதோ அவர்களை எளிதில் வசியம் செய்ய முடியாது என்றும் தாந்த்ரீக ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குங்குமத்தை நாம் வீட்டிலேயே அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டு அதன் சக்தியை மேலும் அதிகரிக்கலாம்.

- Advertisement -

பொதுவாக வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்திலும், சுக்கிர ஹோரையிலும், ராகு காலத்திலும் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யலாம். சுக்கிர ஹோரையில் அர்ச்சனை செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு செய்வது மிகவும் உத்தமம். இந்த குங்கும அர்ச்சனை செய்வதற்கு கெமிக்கல் இல்லாத சுத்தமான குங்குமத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு தாழம் பூவை வாங்கி அதை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதே போல் குங்குமப் பூவையும் வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தாழம்பு பொடியையும், குங்குமப்பூ பொடியையும் குங்குமத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறையில் அம்பாளின் விக்ரகம் இருந்தால் அந்த விக்கிரகத்திற்கு நாம் குங்கும அர்ச்சனை செய்யலாம். அப்படி விக்ரகம் இல்லாதவர்கள் அம்பாளின் படத்திற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம். வழக்கம் போல் வெள்ளிக்கிழமை பூஜை அனைத்தையும் முடித்துவிட்டு செய்ய வேண்டும்.

- Advertisement -

எந்த தெய்வத்திற்கு நாம் குங்கும அர்ச்சனை செய்கிறோமோ அந்த தெய்வத்தின் பெயரையே மந்திரமாக உச்சரித்து 108 முறை குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். உதாரணமாக மாரியம்மன் செய்வதாக இருந்தால் “ஓம் மாரி அம்மனே போற்றி ஓம்” என்று கூற வேண்டும். அம்பிகைக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் “ஓம் அம்பிகையே போற்றி ஓம்” என்று கூற வேண்டும். மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் “ஓம் மகாலட்சுமியே போற்றி ஓம்” என்று கூற வேண்டும்.

இப்படி 108 முறை அர்ச்சனை செய்த அந்த குங்குமம் அன்றைய நாள் முழுவதும் அம்பாளின் பாதத்திலேயே இருக்கட்டும். மறுநாள் காலையில் இந்த குங்குமத்தை வெள்ளி குங்குமச்சிமிழில் வைத்து தினமும் எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளி குங்குமச்சிமிழ் இல்லாதவர்கள் சாதாரண குங்குமச்சிமிழில் கூட வைத்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: திருமணம் விரைவில் நடைபெற எளிய பரிகாரம்

மிகவும் எளிமையான முறையில் நாமே நம் வீட்டில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து முழு பலனையும் பெறுவோம்.

- Advertisement -