அடை மாவு போலத்தான் இந்த குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும். அடை மாவை கொஞ்சம் தண்ணீராக அரைப்போம். இந்தக் குணுக்கிற்கு போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக மாவு அரைத்துக் கொள்ள வேண்டும். தஞ்சாவூர் கும்பகோணம் பக்கங்களில் இந்தக் குணுக்கு ரொம்பவும் பிரபல்யமானது. சுவையான முறையில் அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய குணுக்கு செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் உளுந்து – 1 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், துவரம் பருப்பு – 1/4 கப், பச்சரிசி – 1/4 கப், வர மிளகாய் – 2, இந்த 5 பொருட்களையும் போட்டு கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி 3 லிருந்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஊறிய இந்த ஐந்து பொருட்களையும் போட்டு தோல் உரித்த பூண்டு பல் – 5, போட்டு கொரகொரப்பாக இந்த மாவை அரைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் திக்காக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். மசால் வடைக்கு அரைப்பது போல அரைத்து கொள்ளுங்கள்.
அரைத்த இந்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த விழிதோடு இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், மிக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, சீரகம் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, முருங்கைக்கீரை – 1 ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் துருவல் – 1 கைப்பிடி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து கொடுங்கள். அவ்வளவு தான். குணுக்கு செய்வதற்கு மாவு தயார்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து குணுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் காய வையுங்கள். அதன் பின்பு தயாராக அரைத்து வைத்து இருக்கும் மாவை சிறு சிறு உருண்டையாக எடுத்து இந்த எண்ணெயில் போண்டா போல போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான குணுக்கு தயார். இதை மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும்.
நாம் பருப்பு வகைகளை சேர்த்து குணுக்கு செய்திருக்கின்றோம் அல்லவா. எல்லா பருப்பும் வெந்து மொறு மொறுவென இந்த குணுக்கு நமக்கு கிடைக்கும். அப்படியே சுடசட சாப்பிட்டுப் பாருங்கள். அருமையான ருசி. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் இது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக இந்த குணுக்கு செய்வார்கள். இதில் சேர்க்கக்கூடிய பொருட்களில் சில மாறுதல்கள் இருக்கும். இப்படி ஒரு முறை இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.