மீதமான சாப்பாட்டில் மிக மிக சுலபமாக இப்படியும் இட்லி செய்யலாம். மாவு அரைத்து இட்லி செய்வதை விட இந்த இட்லியின் ருசி சூப்பராக இருக்கும்.

soft-idli-maavu
- Advertisement -

பெரும்பாலான பெண்களின் இன்றைய பிரச்சினை காலை என்ன டிபன் செய்வது? சாப்பாட்டுக்கு என்ன குழம்பு வைப்பது? இரவு என்ன டிபன் செய்வது? என பெண்கள் கவலை கொள்ளும் விஷயமே இந்த சமையல்தான். வீட்டில் உள்ளவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, என பார்த்து பார்த்து சமைப்பதே அவர்களுக்கு பெரும் வேலை. இதிலும் நாம் ஒன்று செய்ய நினைத்திருக்கும் நிலையில் காலையில் வடித்த சாதம் மீந்து விட்டால் அதை இரவு யாரும் சாப்பிடவும் மாட்டார்கள். இப்போது எல்லாம் பழைய சாதம் சாப்பிடும் பழக்கமும் இல்லை. அப்படியானால் அந்த மீந்த சாதத்தை என்ன செய்வது. அதை வீணாகவும் மனம் வராது. இனி அப்படி கவலை பட வேண்டாம். ஒரே ஒரு கப் சாதம் இருந்தால் கூட போதும். அதை வைத்து இரவு டின்னருக்கு சாஃப்ட்னா இட்லி ரெடி.

தேவையான பொருட்கள்: சாதம் – 1 கப், ரவை – 1 கப், புளித்த தயிர் – 2 டேபிள் ஸ்பூன், சமையல் சோடா – 1 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன்.

- Advertisement -

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மீந்த ஒரு கப் சாதத்தை கொட்டி அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மை போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி எடுத்து வைத்து விடுங்கள். பிறகு (எந்த கப்பில் சாதம் எடுத்தீர்களோ அதே கப் அளவிற்கு) 1 கப் அளவுக்கு ரவை எடுத்துக் கொள்ளுங்கள். ரவை பொடியாக இருக்க வேண்டும். உங்களிடம் பெரிய பெரிய ரவைகளாக இருந்தால் மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு அதன் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.

ரவை முழுவதும் நன்றாக முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். ரவை நன்றாக ஊறிய பிறகு அதில் அரைத்து வைத்த சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் நன்றாக புளித்த தயிரை அதில் சேர்த்து விடுங்கள். இதையும் பத்து நிமிடம் நன்றாக ஊற வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து சமையல் சோடா மாவையும், உப்பையும் சேர்த்து மாவை அடித்து கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த மாவு ஒரு மணி நேரமாவது தயிரில் ஊறினால் தான் மாவு நன்றாக புளித்து வரும். நீங்கள் உடனடியாகவே ஊற்ற வேண்டும் என்றால் சமையல் சோடா மாவிற்கு பதிலாக ஈனோ உபயோகப்படுத்தலாம். (ஆனால் ஈனோவை அடிக்கடி நாம் உபயோகிக்க கூடாது). ஒரு மணி நேரம் கழித்து மாவை எடுத்து உபயோகிக்கலாம்.

அவ்வளவு தான் நீங்கள் எப்போதும் போல இட்லி இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்துக் கொள்ளலாம். பத்து நிமிடத்தில் இட்லி சூப்பராக வெந்து கிடைத்து விடும். சாப்டான இந்த இட்லிக்கு சட்னி சாம்பார் வழக்கம் போல சைட் டிஷ் வைத்து சுடச்சுட பரிமாறுங்கள்.

பின்குறிப்பு: தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு, உளுந்து, பொடியாக உடைத்த முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி இந்த பொருட்களை எல்லாம் போட்டு தாளித்து இந்த மாவில் கொட்டி கலந்து இட்லி வார்த்து சாப்பிட்டால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்.

- Advertisement -