மீந்த சாதத்தில் மொறு மொறு முறுக்கு செய்முறை

leftover rice murukku
- Advertisement -

கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் அதிக அளவில் உணவு சாப்பிடாமல் தின்பண்டங்களை சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு தேவைப்படும் பொழுது கடைகளில் இருந்து தின்பண்டங்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே பல தின்பண்டங்களை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தில் நம்மால் கவனம் செலுத்த முடியும். தினமும் குழந்தைகளுக்கு தின்பண்டங்களை செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே மிகவும் எளிதில் செய்யக்கூடிய தின்பண்டங்களை நாம் தெரிந்து வைத்துக் கொண்டோம் என்றால் நினைக்கும்போது எல்லாம் அவர்களுக்கு நம்மால் சாப்பிடுவதற்கு ஏதாவது செய்து தர முடியும். அந்த வகையில் தினமும் நாம் சாதம் வடிப்போம். அந்த சாதம் முழுவதும் காலியாவது கிடையாது. மீதம் கண்டிப்பான முறையில் இருக்கும். அப்படி மீதம் இருக்கக்கூடிய சாதத்தை வைத்து மொறுமொறுவென்று மிகவும் சுவையான முறுக்கு எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • மீந்த சாதம் – 1 கப்
  • பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • இடியாப்ப மாவு – 1/2 கப்
  • எள் – 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
  • நெய் – 2 ஸ்பூன்
  • எண்ணெய் – முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மீதம் இருக்கும் சாதத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். நைசாக அரைக்க முடியாத பட்சத்தில் மட்டும் ஒரு ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த சாத கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் பொட்டுக்கடலை மாவையும் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் இடியாப்ப மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடியாப்ப மாவு இல்லை என்பவர்கள் அதே பங்கிற்கு பொட்டுக்கடலை மாவையே சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக இதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். சாதத்தில் உப்பு சேர்த்திருந்தால் அதற்கேற்றார் போல் பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உப்பு அதிகரித்து விடும்.

- Advertisement -

அடுத்ததாக மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து விட்டு கருப்பு எள்ளை சேர்க்க வேண்டும். கருப்பு எள் இல்லை என்பவர்கள் சீரகம், ஓமம் போன்ற ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு சிறிய பாத்திரத்தில் நெய்யை ஊற்றி நெய் உருகியதும் அதை இந்த மாவுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிணைந்து கொள்ளுங்கள். முறுக்கு மாவு பதத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு முறுக்கு மாவு பதத்திற்கு பிணைந்த பிறகு முறுக்கு அச்சு எடுத்து அதில் இந்த மாவை வைத்து முறுக்கு பிழிய வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்றாக சூடான பிறகு நாம் பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை அதில் சேர்த்து கொள்ள வேண்டும். முறுக்கு ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு திருப்பிப் போட்டு இன்னொரு புறமும் வேக வைக்க வேண்டும். இரண்டு புறமும் நன்றாக வெந்து சிவந்த பிறகு அதை எடுத்து நாம் தனியாக வைத்து விடலாம். மிகவும் எளிமையான வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எந்தவித சிரமமும் பார்க்காமல் மொறுமொறுவென்று முறுக்கை தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: நுங்கு பாயாசம் செய்முறை

கடைகளில் விற்கக்கூடிய பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி தருவதற்கு பதிலாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து இந்த முறையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.

- Advertisement -