செல்வ வளங்களை பெற்றுத்தரும் இந்த 5 மரங்களில் ஏதாவது 1 உங்கள் வீட்டில் இருந்தால் கூட நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.

tree-maram

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது நல்லது. எந்த மரமாக இருந்தாலும் அது நமக்கு சுத்தமான காற்றையும், குளிர்ச்சியையும், நிழலையும், ஆரோக்கியத்தையும் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதிலும் குறிப்பாக சில மரங்கள், நமக்கு வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய மரமாகவும், செல்வ வளத்தை தரக்கூடிய மரமாகவும், அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மரமாகவும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. அந்த மரங்கள் என்னென்ன? அந்த மரங்களை நம் வீட்டில் எப்படி வைக்க வேண்டும்? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

madhulai

அந்த வரிசையில் முதலாவதாக மாதுளை மரத்தை பற்றி பார்க்கலாம். இயற்கையாகவே சூரியனிடம் இருந்து வரக்கூடிய புற ஊதா கதிர்களின் தாக்கத்தை தன்வசம் ஈர்த்துக் கொள்ளும் தன்மை இந்த மரத்திற்கு உண்டு.  வீடுகளில் இந்த மரத்தினை தென்கிழக்கு மூலையில் வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் வீட்டின் செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செயற்கை உரம் சேர்க்காத மாதுளங்கனி நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அல்லவா?

இரண்டாவதாக பெரியநெல்லிக்காய் மரம். அறுசுவைகளும் சேர்ந்திருக்கும் இந்த நெல்லிக்காய் மரத்தினை, நம் வீட்டில் வளர்த்து வருவதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். குறிப்பாக இந்தப் பெரிய நெல்லிக்காய்களை பைரவருக்கு வைத்து, பூஜை செய்து மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது மிகவும் சிறப்பு. புதன் கிழமை அன்று உங்கள் வீட்டில் இருக்கும் நெல்லிக்கனிகளை, எடுத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து விட்டு, அதன் பின்பு தங்கம் வாங்கச் செல்வது மிகவும் சிறப்பானது. இப்படி தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இந்த நெல்லிக்கனி, உங்கள் வீட்டில் இருந்தால் அதைப் பறித்து, ஒரு நாளைக்கு கட்டாயம் ஒன்றாவது சாப்பிடுவீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. நெல்லிக்காய் சாப்பிடும் பழக்கத்தை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் கற்றுத் தாருங்கள்.

keezhanelli

மூன்றாவதாக வீட்டில் இருக்க வேண்டிய மரங்களில் அரசமரமும் ஒன்று. எல்லோரது வீட்டிலும் அரசமரம் வளர்க்க முடியாது தான். இருந்தாலும், அரச மரத்தை வீட்டில் வைப்பதன் மூலம் குருவின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும். அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் ஆதிக்கம் இல்லை என்றால் கூட, இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் குருவினால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடக்க காரணமாக இருப்பவர் இந்த குரு. குருவின் அனுக்கிரகத்தை பெற்றுத்தரும் இந்த மரத்தை நம் வீட்டில் கட்டாயம் வளர்ப்பது மிகவும் நல்லது. இது மட்டும் அல்லாமல் அறிவியல் ரீதியாக காலை நேரத்தில் நாம் அரச மர காற்றை சுவாசிப்பதன் மூலம், அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடலுக்கு கிடைத்து ஆரோக்கியமாக இருப்போம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தெரிகிறதா அரசமரத்தடி விநாயகருக்கு எதற்காக இவ்வளவு சிறப்பு என்று! அரச மரத்தடி விநாயகரை தண்ணீர் ஊற்றி வளம் வர வேண்டும் என்று சொன்னதும் இதற்காகத்தான். அரச மரத்தை வீட்டில் வைத்து வளர்க்க முடியாதவர்கள், இடவசதி இல்லாதவர்கள் ஒரு அரசமரத்தின் குச்சியை மட்டுமாவது எடுத்து வந்து வீட்டில் வைப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த காலங்களில் எல்லாம் வீட்டிற்கு முன் புறத்திலோ அல்லது பின்புறத்திலோ கட்டாயம் இந்த வேப்ப மரம் இல்லாமல் இருக்கவே இருக்காது. காரணம் இது அதிகப்படியான குளிர்ச்சியை தரக்கூடியது. வேப்பமர இலைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதை சாப்பிட்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது அர்த்தமில்லை. அந்த காற்றை சுவாசித்தாலும் கூட நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் உணர்ந்த நம் முன்னோர்கள் வேப்ப மரத்தடியில் கட்டில் போட்டு உறங்கிய காலமும் உண்டு.

vepilai-tree

பொன்னரளி மரத்திற்கு குபேரன் மரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. பெரும்பாலும் இதை எல்லோர் வீட்டிலும் வைத்து வளர்க்கின்றனர். சிலர் இதை வைத்து வளர்க்க கூடாது என்றும் சொல்லுவார்கள். உங்களுக்கு ராசியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் இந்த மரத்தை வளர்த்து கொள்ளலாம். தவறில்லை. இதில் மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாக பூக்கும் பூக்களை பார்க்கும் போதே நமக்கு மனநிறைவு ஏற்பட்டுவிடும். நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனையையும் சரிசெய்யும் மரம் என்றும் சில சாஸ்திர குறிப்புகள்லில் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மரம் நம்முடைய வீட்டிற்கு கண் திருஷ்டி படாமல், செல்வ வளத்தை அதிகரிக்கவும் உறுதுணையாக இருக்கும் என்றும் சில வாஸ்து குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

gold arali

உங்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள சாஸ்திர குறிப்புகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் நல்லது. இதில் ஏதாவது ஒரு மரத்தை வைத்து வளர்த்து தான் பாருங்களேன்! அறிவியல் ரீதியாக வளர்த்தாலும் சரி. ஆன்மீக ரீதியாக வளர்த்தாலும் சரி. மரம் வளர்ப்பது நல்லது தான். அதிலும் இந்த மரத்தை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கப்படுகிறது என்று நினைத்து, அந்த மரத்தை வைக்கும்போது, இந்த நேர்மறை எண்ணங்களே கூட, வீட்டில் செல்வ வளங்களை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகளை உங்களுக்கு தேடித்தரும். நேர்மறை எண்ணங்களை தூண்டக் கூடிய எந்தவொரு செயல்பாட்டையும் நாம் செய்வதில் தவறில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் உள்ள பெண்களின் ‘பாதம்’ தேய்ந்திருந்தால், இதெல்லாம் தான் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veetil valarka vendiya marangal. Lucky tree for money. Lucky tree for money. Athirstam in Tamil. Veetil selvam peruga.