மாதுளம் பழ அல்வா செய்முறை

pomegranate halwa
- Advertisement -

நம்முடைய உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்த பொருட்களாக திகழ்வதுதான் பழங்களும் காய்கறிகளும். காய்கறிகளை நாம் எந்த அளவுக்கு உணவில் எடுத்துக் கொள்கிறோமோ அதே போல் பழங்களையும் நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் எந்தவித சத்துக்கள் குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு ஒரு சில பழங்கள் பிடிக்காமல் போய்விடும். அப்படி பிடிக்காத நபர்களுக்கு அந்த பழங்களால் ஏற்படக்கூடிய நன்மைகள் கிடைக்காத சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த பழங்களை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதாவது ஒரு உணவு பொருளை தயார் செய்வதன் மூலம் அந்த பழங்களின் சத்துக்களை எளிதில் பெற முடியும். அந்த வகையில் இன்றைய சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மாதுளம் பழத்தை வைத்து மாதுளம் பழ அல்வா எப்படி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.

மாதுளம் பழம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய ஒரு பழமாக திகழ்கிறது. இந்த பழத்தை தினமும் ஒன்று என்ற வீதம் சாப்பிடுவதன் மூலம் இரத்த அணுக்களின் உற்பத்தி என்பது அதிகரிக்கும். இதில் இரும்புச் சத்து அதிக அளவு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் துவர்ப்பு சுவை மிகுந்ததாகவும் இந்த மாதுளம் பழம் திகழ்கிறது. இந்த மாதுளம் பழத்தை பெண்கள் முறையாக உண்ணும் பொழுது அவர்களுக்கு மாதவிடாய் தொடர்பான பல பிரச்சினைகள் வராமல் தவிர்க்கப்படுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • மாதுளம் பழ முத்துக்கள் – 1 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • ஏலக்காய் – 4
  • கான்பிளவர் மாவு – 1/2 கப்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • நெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி – 10

செய்முறை

முதலில் ஒரு கப் மாதுளம் முத்துக்களை எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும் பாதி அளவு மாதுளம் பழச்சாறை அதில் ஊற்ற வேண்டும். மாதுளம் பழச்சாறு கொதிக்க ஆரம்பித்ததும் இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

மீதம் இருக்கும் மாதுளம் பழச்சாறை கான்பிளவர் மாவில் ஊற்றி நன்றாக கரைத்து அடுப்பில் இருக்கக்கூடிய மாதுளம் பழச்சாறுடன் ஊற்றி நன்றாக கைவிடாமல் கிளற வேண்டும். மாதுளம் பழச்சாறு சிறிது கெட்டியான பிறகு இதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய்யை ஊற்றி நெய் உருகியதும் முந்திரி பருப்பை சேர்த்து லேசாக சிவக்க விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது மாதுளம் பழ அல்வாவில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்துவிட்டு நாம் உருக்கி வைத்திருக்கும் நெய்யை சிறிது சிறிதாக அல்வாவில் சேர்த்து கைவிடாமல் ஒரே பக்கமாக கிளறிக் கொண்டு இருக்க வேண்டும். மாதுளம் பழச்சாறு நன்றாக சுருண்டு அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறலாம். மிகவும் சுவையான அதேசமயம் சத்து மிகுந்த மாதுளம் பழ அல்வா தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே தித்திக்கும் கேரட் பாயாசம் செய்முறை

மிகவும் எளிதில் செய்யக்கூடிய இந்த மாதுளம் பழ அல்வாவை வீட்டில் இருக்கும் யாரும் வேண்டாம் என்று கூறாமல் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -