நம்முடைய ஊர்களில் மசால்வடை மெதுவடை எந்த அளவுக்கு பிரபல்யமாக இருக்கிறதோ, கர்நாடகாவில் இந்த வடை மிகவும் பிரபல்யம். இதை மதுர் வடை என்று சொல்லுவார்கள். (Maddur vada). இந்த வடைக்கு பருப்பு ஊறவைத்து அரைத்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை எல்லாம் மொத்தமாக போட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து தட்டி எண்ணெயில் விட்டால் வடை தயார். வாங்க இன்ட்ரஸ்டிங்கான புது விதமான இந்த ரெசிபியையும் நாம் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து நீளம் நீளமாக வெட்டி உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அகலமான பௌலாக இருக்கட்டும். இந்த வெங்காயத்தோடு இஞ்சி துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கருவேப்பிலை – சிறிதளவு, ரவை – 1 கப், மைதா – 1 கப், அரிசி மாவு – 1/2 கப், வேர்க்கடலை பொடி – 2 டேபிள் ஸ்பூன், எள்ளு – 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு இந்த பொருட்களை எல்லாம் போட்டு உங்கள் கையைக் கொண்டு நன்றாக அழுத்தம் கொடுத்து பிசையுங்கள். வெங்காயத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீர் விடும். (வறுத்த வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு ஓட்டு ஓட்டினால் கொரகொரப்பான வேர்கடலை பொடி கிடைக்கும். ரவை மைதா இவைகளை சின்ன டீ டம்ளரில் அளந்து கொள்ளுங்கள்.)
பிறகு சூடான நெய் – 1 டேபிள் ஸ்பூன், கொதிக்க கொதிக்க எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு மாவை ஒரு கரண்டியை வைத்து கலந்து விட்டு, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து உங்கள் கையை கொண்டு அழுத்தம் கொண்டு பிசைய வேண்டும். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. தட்டை மாவு பிசைவோம் அல்லவா அது போலவே இந்த மாவை பிசைந்து தயார் செய்து சின்ன சின்ன உருண்டைகளாக தயார் செய்து கொள்ளுங்கள்.
இப்போது இதை நம் வீட்டில் தட்டை தட்டுவது போலவே உங்கள் கையை கொண்டு தட்ட வேண்டும். ஒரு பால் கவர் அல்லது வாழை இலை நடுவே கொஞ்சம் எண்ணெய் தடவி விட்டு அதன் மேலே உருண்டையை வைத்து, தட்டை தட்டுவது போலே தட்டிக் கொள்ளுங்கள். ரொம்பவும் மெலிசாக வேண்டாம். ரொம்பவும் திக்காக வேண்டாம்.
நாம் தட்டும் தட்டையை விட கொஞ்சம் தடிமனாக தட்டி இதை எண்ணெயில் விட்டு பொன்னிறமாக வரும் வரை சிவக்க வைத்து எடுக்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு இதை போட்டு பொறுமையாக பொறித்து எடுக்க வேண்டும். எண்ணெயில் ஒரு தட்டையை விட்டவுடன் அது அடியில் போய்விடும். மேலே எழும்பி வந்தவுடன் இன்னொரு தட்டையை தட்டி போடுங்கள். மேலே மொறு மொறுப்பாக சிவந்து வந்த பிறகு எடுத்து இதை ருசித்துப் பாருங்கள்.
கொஞ்சம் மொறுமொறுப்பாகவும் கொஞ்சம் சாப்டாகவும் அத்தனை ருசியாக இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட. தொட்டுக்கொள்ள காரசாரமான புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, இவைகளை கட்டி சட்னியாக செய்து எதை வேண்டுமென்றாலும் பரிமாறலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஒரு முறை புதுவிதமான இந்த வடையையும் முயற்சி செய்துதான் பார்ப்போமே.
பின்குறிப்பு: இதை மிதமான தீயில் பொன்னிறமாக வரும் வரை, அதாவது ஈரப்பதம் போய் சிடசிடப்பு அடங்கும் வரை பக்குவமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் ஐந்து நாட்கள் வரை கூட கெட்டுப் போகாது. ஆற வைத்து டப்பாவில் ஸ்டோர் செய்து சாப்பிடலாம்.