மதுரை மல்லி பூவுக்கு மட்டுமல்ல, சட்னி வகைகளுக்கு கூட ரொம்பவே பேமஸ் தான். காரசாரமான காரச் சட்னி ரோட்டு கடை முதல் 7 ஸ்டார் ஹோட்டல் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கும். அதிலும் இந்த மதுரை கார சட்னி என்றாலே ஒருவித அலாதி பிரியம் உண்டாகும். இட்லி, தோசை, சூடான சாதத்துடன் தொட்டுக் கொள்ள கெட்டியாக கொடுக்கப்படும் இந்த மிளகாய் கார சட்னி எல்லோருக்குமே பிடித்துப் போய்விடும். அதை எப்படி நாமும் சுலபமாக செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
மதுரை கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 3, காஷ்மீரி மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 10 பல், கொத்தமல்லி தழை – சிறிதளவு.
மதுரை கார சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு அதாவது 30 என்கிற எண்ணிக்கையில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 10 பூண்டு பற்களை தோலுரித்து ஒன்றிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் பொன்னிறமாக வறுபட்டதும் காரத்திற்கு 3 வர மிளகாய் மற்றும் நிறம் கொடுக்க 2 காஷ்மீரி மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை லேசாக வதக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் தோல் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் நன்கு வதங்கி வருவதற்கு சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வதங்கிய பின்பு கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள், 10 பூண்டு பற்களை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக வதக்கியதும், கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம், கொத்தமல்லி தழை ஆகியவை சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜார் ஒன்றைக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் இவற்றைப் போட்டு நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்தவற்றுடன் தாளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ரொம்பவே சுவையாக இருக்கும் இந்த மதுரை கார சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.