விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி நாளை தான் நாம் மகா சங்கடஹர சதுர்த்தி நாள் என்று கூறுகிறோம். வருடம் முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து வழிபாடு செய்த பலனை இந்த ஒரு நாள் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் பெற முடியும் என்றும் விநாயகரின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று எளிமையான முறையில் வீட்டில் வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
முழுமுதற் கடவுளாகவும் நவகிரகங்களின் தலைவராகவும் திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். அவருக்குரிய திதியாக சதுர்த்தி திதி திகழ்கிறது. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம். அந்த சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீரும். அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தியிலேயே மிகவும் விசேஷமான சதுர்த்தியாக திகழ்வதுதான் மகா சங்கடஹர சதுர்த்தி. புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க நினைப்பவர்கள் இந்த நாளில் ஆரம்பிப்பது நல்ல பலனை தரும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருக்க இயலாதவர்கள் கூட இந்த மகா சங்கடஹர சதுர்த்தியை தவறாமல் பயன்படுத்த விநாயகரின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
இந்த வருடம் மகா சங்கடஹர சதுர்த்தி என்பது ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வருகிறது. அதனால் அதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் மாலை நேரத்தில் வழிபாடு செய்யலாம். விரதம் இருக்க முடியாது என்பவர்கள் வழிபாட்டை மட்டும் மேற்கொள்ளலாம். அப்படி வழிபாட்டை மட்டும் மேற்கொள்ள நினைப்பவர்கள் காலை 10:45 மணியிலிருந்து 11 45 மணிக்குள்ளோ அல்லது மாலை 5 மணியிலிருந்து இரவு 10:30 மணிக்கு இந்த வழிபாட்டை செய்யலாம்.
வீட்டில் விநாயகப் பெருமான் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவரை சுத்தம் செய்து சந்தன குங்குமம் வைத்து, அவருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லை மாலையாக கட்டி போட்டுக் கொள்ளுங்கள். இயன்றவர்கள் வெள்ளெருக்கு பூ மாலை, வாசனை மிகுந்த ஏதாவது ஒரு மலரை பயன்படுத்தியும் மாலை போட்டுக் கொள்ளலாம். அடுத்ததாக விநாயகப் பெருமானுக்கு முன்பாக 11 அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்கலாம். பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்துக் கொள்ளுங்கள்.
அதில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து அந்த பிள்ளையாருக்கும் அருகம்புல்லை சாற்றி மலர்களை சாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அந்த பிள்ளையாருக்கு முன்பாக நெய்வேத்தியம் வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பாயாசம், தேன், பொரிகடலை, கொழுக்கட்டை, பழங்கள், இனிப்பு வகைகள் போன்ற எதுவெல்லாம் உங்களால் செய்ய இயலுமோ அவை அனைத்தையும் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாசனை மிகுந்த உதிரி பூக்களை கையில் வைத்துக்கொண்டு தங்களுக்கு தெரிந்த விநாயகரின் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
எந்த மந்திரமும் தெரியாது என்பவர்கள் “ஓம் கணேசாய நமஹ” என்னும் மந்திரத்தை கூறி கூட அர்ச்சனை செய்யலாம். விநாயகர் அகவலை பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி 11 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்தில் நடக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அபிஷேகத்தில் கலந்து கொள்வது கூடுதல் பலனை தரும். அஞ்சு இரவு சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கும் வழிபாடு
சக்தி வாய்ந்த இந்த அற்புதமான நாளில் விநாயகப் பெருமானை வீட்டிலேயே வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான சங்கடங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.