ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் இல்லாமல் முன்னேற வேண்டும் என்றால் அவருக்கு கண்டிப்பான முறையில் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருள் வேண்டும். அப்படி முன்னோர்களின் அருளை பெறுவதற்கு உகந்த நாளாக தான் அமாவாசை நாள் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்து தானங்களை செய்வதன் மூலம் முன்னோர்களின் அருளை பெற முடியும். அப்படிப்பட்ட முன்னோர்கள் நம் வீடு தேடி வந்து நம்முடன் இருந்து நமக்கு அருளாசி புரியக்கூடிய நாட்கள்தான் மஹாளய பட்ச நாட்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாட்களில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாளய பட்ச கால வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் முன்னோர்களை வழிபடாதவர்கள் கூட தை, ஆடி, புரட்டாசி போன்ற அமாவாசைகளில் கண்டிப்பான முறையில் முன்னோர்களை வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை மகாளய பட்ச அமாவாசை என்று கூறுவது உண்டு. இந்த அமாவாசைக்கு முன்பாக இருக்கக்கூடிய 15 நாட்களும் மகாளய பட்ச காலம் என்று கூறுவார்கள். இந்த 15 நாட்களும் நம்முடைய முன்னோர்கள் நம் வீடு தேடி வந்து நம்முடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாட்களில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி பார்ப்போம்.
மஹாளய பட்ச காலம் என்பது செப்டம்பர் மாதம் 8ம் தேதி திங்கட்கிழமையிலிருந்து செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கிறது. இந்த 15 நாட்களும் நாம் கண்டிப்பான முறையில் நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். நம்முடைய முன்னோர்கள் எந்த திதியில் இறந்தார்கள் என்பதை பொறுத்துதான் நம் தர்ப்பணம் செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். இந்த 15 திதிகளுள் ஏதாவது ஒரு திதியாக தான் இருக்கும். அதனால் தான் இந்த 15 நாட்கள் நம் முன்னோர்களின் நினைத்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.
முடிந்த அளவிற்கு வீட்டு வாசலில் கோலம் போடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி கோலம் போட வேண்டும் என்றால் காவி பொடியை பயன்படுத்தி கோலம் போட்டுக் கொள்ளலாம். இதே போல் தான் பூஜை அறையிலும் கோலம் போட வேண்டும் என்று நினைப்பவர்கள் காவி மற்றும் மஞ்சள் நிற பொடியை பயன்படுத்தி கோலம் போட வேண்டும். அடுத்ததாக இந்த 15 நாட்களும் தினமும் ஆண்கள் தங்களுடைய இறந்த முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும். 15 நாட்களும் அசைவத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் நாம் தினமும் சமைக்கும் பொழுது எச்சில் படுவதற்கு முன்பாக சிறிது உணவை எடுத்து காக்கைக்கு வைக்க வேண்டும்.
அடுத்ததாக மாலை 6 மணிக்கு மேல் நம்முடைய வீட்டு வரவேற்புரையில் தெற்கு பார்த்தவாறு ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதில் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு டம்ளர் நிறைய தண்ணீரையும் ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் நெய்வேத்தியமாக வைத்து முன்னோர்களை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபம் ஒரு மணி நேரம் எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை குளிர வைத்து அதே இடத்தில் அப்படியே விட்டுவிடுங்கள்.
மறுநாள் காலையில் தீபத்தை எடுத்து எப்போதும் வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். தண்ணீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த இனிப்பை எறும்புகள் இருக்கக் கூடிய இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி இந்த மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நம்முடைய முன்னோர்கள் அனைவரின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும்.
இதையும் படிக்கலாமே: திருஷ்டிகள் அணுகாமல் இருக்க
முன்னோர்களின் அருளை பரிபூரணமாக பெற்று வாழ்க்கையில் இருக்க கூடிய சுபகாரிய தடைகளை நீக்கும் இந்த மகாளய பட்ச கால வழிபாட்டை அனைவரும் செய்து சிறப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.