பெரும்பாலும் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவில் அப்பம் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக மைதா மாவை சேர்த்து ஒரு ஆப்பம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த அப்பத்தை சுட்டு கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயமாக விரும்பி சாப்பிடுவார்கள். பண்டிகை நாட்களில் கூட பிரசாதமாக இந்த அப்பத்தை நாம் செய்து கொள்ளலாம். பத்தே நிமிடத்தில் இன்ஸ்டன்ட் ஸ்வீட் அப்பம், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்வது எப்படி?

முதலில் இந்த அப்பம் செய்ய தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். மைதா – 2 கப், சர்க்கரை – 1 ஒரு கப், ஏலக்காய்த் தூள் – 1/4 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், அவ்வளவு தாங்க. இந்த அப்பத்தை சூப்பரா செஞ்சிடலாம்.
ஒரு அகலமான பவுலில் முதலில் 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். இந்த தண்ணீரில் எடுத்து வைத்திருக்கும் 1 கப் சர்க்கரையை கொட்டி ஒரு கரண்டியை போட்டு நன்றாக கலக்கவேண்டும். சர்க்கரை தண்ணீரில் முழுமையாக கரைந்த பின்பு ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா போட்டு மீண்டும் ஒருமுறை கலந்து கொள்ளுங்கள். அடுத்தபடியாக தயாராக எடுத்து வைத்திருக்கும் மைதா மாவில் இருந்து 1 கப்பை சேர்த்து முதலில் கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு இன்னொரு கப் மைதாவையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும்.

கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு இந்த மாவு நமக்கு கிடைக்கும். உங்களுக்கு ரொம்ப ரொம்ப இந்த மாவு கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். மாவை தயார் செய்த பின்பு இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நன்றாக அடித்து கலக்கி மாவைத் தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். மாவை ரொம்பவும் தண்ணீராக கரைத்து விட்டால் அப்பம் எண்ணெய் குடித்து விடும். பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அகலமான பேன் இருந்தால் சௌகரியமாக இருக்கும். அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் தான் வைக்கவேண்டும். அடுப்பை ரொம்பவும் சிம்மில் வைத்து விட்டு அப்பத்தை ஊற்றினாலும் எண்ணெய் குடிக்கும். காய்ந்த எண்ணெயில் குழி கரண்டியில் ஒவ்வொரு அப்பமாக ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க விட்டு எடுத்தால் சுவையான அப்பம் தயார்.

அப்பத்தை பொறுமையாக இரண்டு பக்கமும் பிரட்டிப் போட்டு பொன்னிறம் வந்தவுடன் எண்ணெயை வடித்து எடுத்து பரிமாறி பாருங்கள். இந்த அப்பம் கொஞ்சம் ஆறிய பின்பு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்குப் பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.