மல்லி சட்னி செய்முறை செய்வது எப்படி
சட்னியில் பலவிதம் இருந்தாலும் நாம் அடிக்கடி செய்வதென்னவோ வேர்கடலை, பொட்டு கடலை சட்னி தான். எப்போதாவது இந்த தக்காளி சட்னி, வெங்காய சட்னி, இது போன்ற சட்னிகளை அரைப்போம். இந்த புதினா, மல்லி, சட்னிகளை பெரும்பாலும் செய்வதில்லை. ஏனெனில் குழந்தைகளுக்கு இந்த சட்னிகள் அவ்வளவாக பிடிப்பதில்லை. இந்த முறையில் பொட்டு கடலையோடு, கொத்து மல்லியையும் சேர்த்து இந்த சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி கொத்தமல்லி சேர்த்து அரைப்பதால் உடலுக்கும் மிகவும் நல்லது. இந்த சட்னியை வாரம் ஒரு முறையாவது குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இந்த சட்னி ரெசிபியை ரொம்ப சுலபமா எப்படி செய்யவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மல்லி சட்னி அரைக்க தேவையான பொருட்கள்: கொத்தமல்லி – 1 கைப்பிடி, பொட்டுக் கடலை – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் -5, பூண்டு -5 பல்,தோல் சீவிய இஞ்சி – சின்ன துண்டு, வெங்காயம் – 2 , தக்காளி-1, கடுகு -1/2 டீஸ்பூன், மிளகு – 10, பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், சக்கரை -1/2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை -5 இலைகள்.
இந்த சட்னி செய்ய முதலில் கொத்தமல்லியை சுத்தம் செய்து அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி இரண்டையும் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
மல்லி சட்னி செய்முறை விளக்கம்:
இப்போது அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அரிந்து வைத்த வெங்காயம் சேர்த்து பாதி அளவு வதங்கிய பிறகு தக்காளி, மிளகு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு அப்படியே ஆற வைத்து விடுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்த கொத்தமல்லியுடன் பொட்டுக் கடலையை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வதக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, சக்கரை எல்லாம் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அரைத்த சட்னியை பவுலின் சேர்த்து ஒரு சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்த உடன் கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதை இந்த சட்னியில் ஊற்றி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான மல்லி சட்னி தயார்.
இதையும் படிக்கலாமே: ‘கத்திரிக்காய் பூண்டு வறுவல்’ இப்படி மட்டும் செஞ்சி கொடுத்தால் ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் நீங்கள் சலிக்காம சாப்பிட்டுகிட்டே இருப்பீங்க!
இந்த சட்னி இட்லி, தோசை பொங்கல் என அனைத்திற்குமே நல்ல காம்பினேஷன் அதிலும் சுட சுட இட்லியுடன் இதை சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும்.