மாசி மகம் என்பது நம்முடைய பாவங்களை நீக்கி இறைவனடி சேர்வதற்கு உரிய தினமாக கருதப்படுகிறது. அந்த தினத்தில் பலரும் பலவிதமான வழிபாட்டு முறைகளை மேற்கொள்வார்கள். காலையில் எழுந்து குளிப்பதிலிருந்து பலவிதமான பரிகாரங்களும் அன்றைய நாளில் செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் நம்முடைய பாவங்கள் நீக்கப்பட்டு இறைவனின் திருவருளை பெற முடியும். இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய குடும்பம் சிறப்பான முறையில் இருப்பதற்கும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரங்களில் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிறப்பான குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். மேலும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்குரிய மன தெளிவு வேண்டும். எந்தவித கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு தைரியமும் அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வருவதற்குரிய நம்பிக்கையும் வேண்டும். இவை அனைத்தும் இருந்து விட்டாலே அந்த குடும்பத்தில் மன நிம்மதி என்பது அதிகமாகவே இருக்கும். இவை அனைத்தையும் ஒரு சேர பெறுவதற்கு மாசி மகம் நமக்கு துணை புரிகிறது. அன்றைய தினத்தில் நாம் சில பொருட்களை தானம் செய்வதன் மூலம் இவை அனைத்தும் நமக்கு கிடைக்கும்.
மாசி மகம் என்பது மார்ச் மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் பலரும் கும்பகோணம் சென்று புனித நீராடுவார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய புண்ணிய நதிகளில் நீராடும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். மேலும் சிவபெருமானை வழிபட்டு அவரின் அருளைப் பெறவும் செய்வார்கள். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அருளை பெறுவதற்கு அர்த்தநாரீஸ்வரன் அருளை பெறுவதும் சரிசமமாகவே கருதப்படுகிறது. அப்படி அந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் அருளை பெறுவதற்கு அவரின் அவதாரமாக திகழக்கூடிய திருநங்கைகளுக்கு நாம் சில தான தர்மங்களை செய்வதன் மூலம் மேற்சொன்ன அனைத்து பலன்களும் நமக்கு கிடைக்கும்.
மாசி மகம் நாள் அன்று அருகில் இருக்கக்கூடிய திருநங்கைகளுக்கு சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளை தானமாக தரவேண்டும். அதோடு ஒன்பது நாணயங்கள் அல்லது 9 ரூபாய் நோட்டுகள் தானமாக தரவேண்டும். இந்த நாணயங்கள் ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி பத்து ரூபாயாக இருந்தாலும் சரி, அதைப்போல் ரூபாய் நோட்டும் பத்து ரூபாயாக இருந்தாலும் சரி 500 ரூபாயாக இருந்தாலும் சரி அது அவரவர்களின் விருப்பத்தை பொருத்தும் வசதிக்கேற்பவும் தரலாம்.
இதோடு சேர்த்து தானியங்களில் துவரம் பருப்பையும், கோதுமையையும் தானமாக தர வேண்டும். இதுவும் அளவுகள் என்பது எதுவும் கிடையாது. தங்களுடைய வசதிக்கேற்ப தரலாம். கோதுமையை தானமாக தர இயலவில்லை என்றால் கோதுமையால் செய்த உணவுகளை கூட தானமாக தரலாம். இப்படி மாசி மகம் நாள் அன்று திருநங்கைகளை சந்தித்து அவர்களுக்கு இந்த பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை மட்டுமாவது நாம் தானமாக தந்தோம் என்றால் நம்முடைய குடும்பத்தில் ஒற்றுமையும், மன நிம்மதியும், மன தெளிவும் ஏற்படும். எந்த வித பிரச்சினையாக இருந்தாலும் அதை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ளக்கூடிய பக்குவம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:கும்பகோணம் குளத்தில் குளித்த பலன் கிடைக்க
இந்த எளிமையான தானத்தை மாசி மகம் நாள் அன்று செய்து அர்த்தனாரீஸ்வரர் அருளால் குடும்பத்தை சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்லலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.