மனிதனாக மாறிய நாகம் – விக்ரமாதித்தன் கதை

Pambu manithan kathai

தன்னை காட்டின் வழியே சுமந்து சென்ற விக்கிரமாதித்யனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. “இரத்தினபுரி” என்கிற ஊரில் ஒரு முனிவரின் சாபத்தால் சில நேரம் பாம்பாகவும் சில நேரம் மனிதனாகவும் இருக்கும் ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். அவ்வூரின் காட்டை ஒட்டிய பகுதியில் வாழ்ந்து வந்த அவன், அந்த ஊரின் ஒரு இளம் பெண்ணை மிகவும் விரும்பி அவளை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான். ஆனால் இவனின் இந்த சாபத்தைப் பற்றி அறிந்த அந்த பெண்ணும் இவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள். இதனால் கவலையடைந்த அவன் ஒரு துறவியிடம் சென்று தன் நிலையைக் கூறி வருந்தினான். அதற்கு அந்த துறவி “நீ நாகமனிதனாக இருப்பதால் உனக்குள் நாகமாணிக்கம் இருப்பதாகவும் அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு தினமும் இரவு நேரத்தில் தவமிருந்தால் நீ மீண்டும் முழுமையான மனிதனாக மாற வாய்ப்பிருப்பதாக” கூறினார். அதன் படியே அந்த நாகமனிதனும் செய்துவந்தான்.

vikramathitan

அப்போது ஒரு நாள் தனது மாட்டை தேடிவந்த ரங்கன் என்ற இளைஞன், காட்டு விலங்குகள் துரத்தியதால் இந்த நாக மனிதன் வசித்த புற்றிற்கு அருகிலுள்ள மரத்தில் ஏறிகொண்டன். இரவு முழுவதும் அந்த மரத்திலேயே இருந்த அவன் அருகிலுள்ள புற்றிலிருந்து ஒரு நாகம் வெளிவருவதைக் கண்டான். அந்த நாகம் ஒரு நாகரத்தினத்தை வெளியே கக்கிவிட்டு, அந்த நாகம் ஒரு மனிதனாக மாறி தியானத்தில் ஈடுபடுவதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். பொழுது விடியும் போது அந்த நாகமனிதன் மீண்டும் நாகமாக மாறி, தனது ரத்தினத்தை முழுங்கிக்கொண்டு மீண்டும் புற்றிற்குள் சென்று மறைந்ததை ரங்கன் கண்டான்.

மறுநாள் இதைப்பற்றி தனது நண்பன் கண்ணனிடம் கூறினான் ரங்கன். அதற்கு கண்ணன், நாகரத்தினம் மிகவும் சக்திவாய்ந்தது என்றும், அது நம்மிடம் இருந்தால் பாம்பு தீண்டி இறக்கும் நிலையில் இருப்பவர்களையும் நாம் உயிர்பிழைக்க வைக்க முடியும் என்றும், எனவே இன்றிரவு அந்த நாகமனிதனிடமிருந்து நாம் நாகரத்தினத்தை எடுத்துக்கொள்வோம் என்று கூறினான். ரங்கனுக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் கண்ணனுடன் துணைக்கு சென்றான். இருவரும் அந்த நாகமனிதன் இருக்கும் புற்றிற்கு அருகில் ஒளிந்துகொண்டு காத்திருந்தனர். வழக்கம் போல் அந்த நாகமனிதன் தனது நாகரத்தினத்தை வெளியே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்த போது ரங்கனின் நண்பனான கண்ணன், அந்த ரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

Snake

தியானம் களைந்து பார்த்த நாகமனிதன், தனது நாகரத்தினம் திருடப்பட்டதால் தான் முழுமையாக மனிதனாகும் தனது லட்சியம் தடைபட்டதை எண்ணி வருந்தினான். இதற்கிடையே அந்த ரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்ற கண்ணன் பக்கத்து ஊரில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களை, அந்த ரத்தினத்தைக்கொண்டு குணப்படுத்தி மிகுந்த அளவில் செல்வம் ஈட்டினான். மீண்டும் இந்திராபுரிக்கு திரும்பிய அவன் தன் நண்பன் ரங்கனை தன்னுடன் வந்து தனது செல்வத்தை பகிர்ந்துகொள்ளுமாறு அழைத்தான். அதற்கு ரங்கன் தன்னுடைய உழைப்பிலேயே தான் வாழ விரும்புவதாக கூறி கண்ணனுடன் வர மறுத்தான். இதைஏற்றுக்கொண்ட கண்ணனும் பக்கத்து ஊருக்கு திரும்ப, காட்டை ஒட்டிய வழியில் வந்து கொண்டிருந்த போது இவனிடம் தனது நாகரத்தினம் இருப்பதை உணர்ந்த பாம்பின் உருவிலிருந்த அந்த நாகமனிதன் அவனை தீண்டினான். ஆனால் கண்ணன் இறக்கவில்லை அதே நேரத்தில் அந்த நாகமனிதனும் சாப விமோச்சனம் பெற்று மனித உருவம் கொண்டான்.

“விக்ரமாதித்தியா கண்ணன் தன்னுடன் வந்து, தான் சம்பாதித்த செல்வத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கூறியபோதும் ரங்கன் ஏன் அவனுக்கு மறுப்பு தெரிவித்தான்? மேலும் தனது நாகரத்தினத்தை திருடியது கண்ணன் தான் என்றறிந்து அவனை அந்த நாகமனிதன் தீண்டியும் கண்ணன் இறக்கவில்லை. அந்த நாகமனிதனும் மீண்டும் முழுமையான மனிதன் ஆனான். இது எப்படி சாத்தியம்? எனக்கூறு” என்றது வேதாளம்.

Cobra snake

அதற்கு விக்ரமாதித்தியன் “ரங்கன் உழைப்பை மிகவும் விரும்புபவன். தனது உழைப்பின்றி வரும் பொருளை ஏற்றுக்கொள்ளாத உத்தமசீலன். எனவே கண்ணன் தனது செல்வதை அவனுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியும் அவன் மறுத்துவிட்டான். அதுபோல அந்த நாகரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்ற கண்ணனும் பிறரின் உயிரைக் காப்பாற்றும் புனித காரியத்தையே செய்தான். எனவே மிகுந்த புண்ணியம் ஈட்டிய கண்ணன் நாகம் தீண்டியும் இறக்கவில்லை. கண்ணனின் புனித உடலை தீண்டிய அந்த நாகமனிதனும் சாபவிமோசனம் பெற்று முழு மனிதனானான்” என பதில் கூறினான். இந்த பதிலைக் கேட்டவுடன் அந்த வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

தெய்வீகம் வீடியோ : Kovil
இதையும் படிக்கலாமே:
இறந்த பெண்ணை உயிர்ப்பித்த இளஞ்சன் – சிறு கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள், கருத்துள்ள சிறு கதைகள், சிறுவர்களுக்கான கதைகள் என அனைத்தையும் படிக்க தெய்வீகம் முக்கால் நூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.