மன்னனை அசர செய்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

king-1-1 (1)
- Advertisement -

வேதாளத்தை தனது முதுகில் சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. “ஜெய்புரி” என்ற நாட்டை ஆண்டு வந்த சத்யன் என்ற மன்னன் அதிசயமான விடயங்களை அறிந்து கொள்வதில் தீராத ஆர்வங்கொண்டவனாக இருந்தான். எனவே நாட்டின் நிர்வாகத்தை மந்திரிகளிடம் கொடுத்துவிட்டு சத்யன் இத்தகைய விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது தனது நாட்டின் நிலைமையை தனது மந்திரிகளிடம் கேட்டு வந்தான். ஒரு நாள் வருகிற பௌர்ணமியன்று தனது அரண்மனையில் மிகவும் அதிசயம் வாய்ந்த விஷயங்களை, தனக்கு காட்டுபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு தருவதாக அறிவித்தான் மன்னன் சத்யன். அதன் படி வந்த பௌர்ணமி தினத்தன்று மன்னனிடம் தங்கள் அதிசய பொருளைக் காட்டி பரிசு பெற ஏகப்பட்ட மக்கள் அரண்மனையின் பிரதான வாயில்களில் கூடியிருந்தனர்.

king

அதன் படி முதலில் வந்த மனிதன் ஒருவன் தான் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு அதிசய கல் ஒன்று தனக்கு கிடைத்ததாகவும், அது பகலையே இரவாக மாற்றக்கூடிய சக்தி கொண்டது என்று கூறி, தனது பெட்டியிலிருந்து அந்த கல்லை வெளியே எடுத்த போது அந்த அரண்மனை மற்றும் அதன் வெளிப்புறம் இருள் சூழ்ந்ததைக் கண்டு அங்கிருந்தோரும், மன்னன் சத்யனும் ஆச்சர்யம் அடைந்தனர். உடனே மன்னன் அந்த மனிதனுக்கு ஆயிரம் பொற்காசுகளை அளித்தான்.

- Advertisement -

இரண்டாவதாக வந்த மனிதன் ஒருவன் தான் தோட்டத்தில் உலா வந்த போது வானில் ஒரு “கந்தர்வ தம்பதி” பறந்து செல்வதை கண்டதாகவும், அப்போது அந்த கந்தர்வ பெண் தலையில் சூடியிருந்த பூ ஒன்று தனது தோட்டத்தில் விழுந்தது எனவும், அது அவ்விடத்தையே நறுமணம் கமலச் செய்தது என்றும் மேலும் அதை தாம் பாதுகாத்த நாள் முதல் இன்று வரை வாடவில்லை என்று கூறி, அந்த பூவை மன்னனிடம் அவன் காட்டிய போது அது வாடாமலிருப்பதை கண்டான் மன்னன். மேலும் அது அந்த அரண்மனை முழுவதும் நறுமணத்தை பரப்பியது. உடனே அவனுக்கும் மன்னன் ஆயிரம் பொற்காசுகளைத் தந்தான்.

இப்போது குணசீலன் என்ற இளைஞன் மன்னன் முன்பு வந்தான். அவனின் அதிசய பொருள் என்ன என்று மன்னன் கேட்ட போது தான் இந்த அரண்மனைக்குள் நேர்வழியாக வரவில்லை என்றும் “லஞ்ச வாயில்” என்ற அதிசய வழியாக வந்ததாக கூறினான். அப்படி ஒரு வாயில் தனக்குத் தெரியாமல் தன் அரண்மனையில் எங்கிருக்கிறது என்று கேட்ட போது, இந்த அரண்மனையின் காவலர்கள் மன்னரிடம் பரிசு பெற விரும்புபவர்களிடம் தலைக்கு பத்து பொற்காசுகள் வாங்கிக்கொண்டே அவர்களை உள்ளே அனுமதிப்பதாகவும், தானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்தே உள்ளே வந்ததாகவும், மேலும் மன்னர் நிர்வாகத்தை கவனிக்காத தைரியத்தில் மந்திரிகளும், அதிகாரிகளும் பல விடயங்களில் ஊழல் செய்வதாக தைரியமாக மன்னனிடம் கூறினான். இதைக் கேட்ட மன்னன் தனது மந்திரிகளை பார்த்த போது அவர்கள் வெட்கத்தால் தலைகுனிந்தனர். அப்போது மன்னன் சத்யன் எழுந்து நின்று இதுவே தாம் கண்ட மிகவும் அதிசயமான விடயம் என்று கூறி குணசீலனுக்கு தனது முத்துமாலையை அணிவித்து, அவனை தனது பிரதான அமைச்சராக ஆக்கிக்கொண்டான்.

- Advertisement -

King

“விக்ரமாதித்தியா முன்பு இருவர் காட்டிய அதிசயமான பொருட்களை விட குணசீலன் கூறிய விடயம் எப்படி அதிசயமிக்க ஒன்றாகியது? மேலும் மற்ற இருவருக்கு ஆயிரம் பொற்காசுகளை கொடுத்த மன்னன் சத்யன், குணசீலனுக்கு தனது முத்துமாலையை தந்ததோடு மட்டுமில்லாமல், அவனை பிரதான அமைச்சராக்கியது சரிதானா? என்று கேட்டது வேதாளம்.

அதற்கு விக்ரமாதித்தியன் “மற்ற இரண்டு பேர் காட்டிய பொருட்கள் நிச்சயம் அதிசயமானவை தான். ஆனால் அது வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு பயன் தருமே ஒழிய நாட்டிற்கோ, மக்களுக்கோ எந்த ஒரு நன்மையையும் செய்யாது. ஆனால் குணசீலன் கூறிய விடயங்கள் நாட்டிற்கும் , மக்களுக்கும் நன்மை ஏற்படுத்தக்கூடியவை. அதுமட்டுமில்லாமல் எதற்கும் அஞ்சாமல் மன்னனிடம் அவனுக்கு கீழே பணிபுரிபவர்கள் பற்றி தைரியமாக எடுத்துரைத்தான். எனவே சத்யன் குணசீலன் கூறிய விடயத்தை மிகவும் அதிசயமானது என்று கூறி, அவனுக்கு முத்துமாலையை பரிசளித்து தனது அமைச்சராக ஆக்கிக்கொண்டது சரியான முடிவு” என்று பதிலளித்தவுடன் வேதளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
மனிதனாக மாறிய நாகம் – விக்ரமாதித்தன் கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள், நீதி கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -