மரவள்ளி கிழங்கு இனிப்பு தோசை செய்முறை

maravallikizhangu dosai
- Advertisement -

தோசை மட்டும்தான் பிடிக்கும் என்று சொல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தோசையை செய்து கொடுத்தோம் என்றால் ஆரோக்கியத்துடன் அவர்கள் விரும்பிய தோசையும் கிடைக்கும். பல ஆரோக்கியமான பொருட்களை தோசையுடன் சேர்த்து நாம் சமைத்துக் கொடுக்கலாம். ஆனால் அதன் சுவை எப்படி இருக்கும் என்பது தெரியாமல் குழந்தைகள் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு சுவையுடன் கூடிய உடனடியாக தயார் செய்யக்கூடிய ஒரு மரவள்ளி கிழங்கு தோசை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

மரவள்ளி கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் குடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. மரவள்ளி கிழங்கில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் போலேட் மற்றும் விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டி-ஆக்சைடுகளும் மரவள்ளிக்கிழங்கில் இருக்கிறது. மேலும் இது கண்பார்வை குறைபாட்டை நீக்கவும் உதவுகிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஞாபக மறதியை குறைப்பதுடன் ரத்தத்தின் சிவப்பணுக்களை அதிகரிக்கவும் மரவள்ளி கிழங்கு உதவுகிறது. மேலும் இதில் விட்டமின் கே மற்றும் கால்சியம் அதிக அளவில் இருபபதால் எலும்புகள் வலுவாகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பொடியாக நறுக்கிய மரவள்ளி கிழங்கு – 2 கப்
  • பச்சரிசி மாவு – 1 கப்
  • வெல்லம் – 1 கப்
  • தேங்காய் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் மரவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்துவிட்டு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், வெல்லம், பச்சரிசி மாவு, உப்பு, ஏலக்காய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தோசை மாவு தயாராகிவிட்டது. அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் லேசாக சூடானதும் அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிறிது கனமாக ஊத்தாப்பம் போல இந்த மாவை ஊற்ற வேண்டும். பிறகு மாவை சுற்றி சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு ஒரு மூடியை வைத்து குறைந்த தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

குறைந்த தீயில் தான் வைக்க வேண்டும். அதிக தீயில் வைத்தால் கருகிவிடும். தோசை நன்றாக வெந்த பிறகு விருப்பம் இருந்தால் அதை திருப்பி போட்டு மறுபடியும் வேகவிட்டு எடுத்துவிடலாம். இல்லையெனில் அப்படியே கூட வைத்துக் கொள்ளலாம். சட்னி எதுவும் இதற்கு தேவையில்லை. இதில் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்திருப்பதால் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மீந்த சாதத்தில் மொறு மொறு முறுக்கு செய்முறை

உடனே அதே சமயம் ஆரோக்கியமான ஒரு இனிப்பு மரவள்ளி கிழங்கு தோசையை செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -