பெரும்பாலும் மரவள்ளிக் கிழங்கை வாங்கி அவித்து சாப்பிடுவது நம் வழக்கமாக இருக்கும். சில பேர் அதில் இனிப்பு சேர்த்து வடை செய்வார்கள். சில பேர் காரம் சேர்த்து வடை செய்வார்கள். இன்று நாம் மரவள்ளிக் கிழங்கு கார வடை ரெசிபியை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கிழங்கு வகைகளை உப்பு போட்டு வேக வைத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரே ஒரு முறை இப்படி வடை போட்டுக் கொடுங்கள். ஒருவடை கூட மிஞ்சாமல் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

முதலில் 7 வரமிளகாய்களை தண்ணீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு மீடியம் சைசில் இருக்கும் ஒரு மரவள்ளிக்கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். 250 கிராம் அளவு இருக்கும் மரவள்ளிக்கிழங்கு கீழே சொல்லப்படும் அளவுகள் சரியானதாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி ஒரு துருவியில் துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடலைப் பருப்பு 1/4 கப் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கடலைப்பருப்பை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அதில் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பை போட்டு கொள்ள வேண்டும். அதன் பின்பு சிறிய துண்டு இஞ்சி, பூண்டு பல் – 5, ஊற வைத்திருக்கும் வரமிளகாய், இந்த பொருட்களை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 80% சதவிகிதம் கடலை பருப்பு அரைபட்டால் போதும்.

இப்போது அகலமான ஒரு பவுலில் துருவிய மரவள்ளிக் கிழங்கை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். தண்ணீரோடு போட்டால் வடை எண்ணெயில் பிரிந்து போய் விடும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். துருவிய மரவள்ளிக்கிழங்கை தண்ணீரை பிழிந்து பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கடலைமாவு விழுதையும் இதோடு போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த எல்லாப் பொருட்களையும் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். இப்போது நமக்கு மசால் வடை மாவு போல, வடைக்கு மாவு தயாராக இருக்கும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடு செய்து கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு மசால்வடை போல மாவை சிறுசிறு உருண்டைகள் பிடித்து உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை தயார்.

இந்த சீசனுக்கு மரவள்ளிக்கிழங்கு அதிகமாகக் கிடைக்கும். வாங்கி ஒரே ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு மிஸ் பண்ணாமல் செஞ்சு கொடுங்க.