மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி என்பது டிசம்பர் மாதம் 19ஆம் தேதி மதியம் 1:11 மணிக்கு ஆரம்பிக்கிறது. இது வெள்ளிக்கிழமை மதியம் 1:43 வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் இந்த ஒரு பொருளை வாராகி அம்மனுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ய அவர்கள் வாழ்க்கையில் தடைபட்டிருக்கக் கூடிய அனைத்து செயல்களும் தடையின்றி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த பொருளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதற்காக நம்முடைய இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் வழிபாடு செய்வோம். அப்படி பலரும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக பாவித்து வழிபாடு செய்யக்கூடிய ஒரு தெய்வமாகத்தான் வாராகி அம்மன் திகழ்கிறார், வாராகி அம்மனுக்கு உரிய திதியான பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்று வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை வியாழக்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்யலாம். அப்படி இல்லாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரமான 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளும், காலை 6:00 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளும் செய்யலாம். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் பொழுது அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
வீட்டில் வாராஹி அம்மனின் படமோ சிலையோ இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை படமோ சிலையோ இல்லை என்னும் பட்சத்தில் ஒரே ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றி அந்த தீபத்தில் வாராகி அம்மன் எழுந்தருள வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். பஞ்சமி திதி அன்று எந்த முறையில் வாராகி அம்மனை வழிபாடு செய்வோமோ அதே முறையில் வழிபாடு செய்துவிட்டு கூடுதலாக இந்த ஒரு வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
தீபம் ஏற்றி நெய்வேத்தியம் வைத்து மஞ்சள் அல்லது பச்சை நிற துணியில் ஐந்து விரலி மஞ்சள் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய இடது கையில் வைத்துக்கொண்டு முதலில் உங்களுடைய குலதெய்வத்தை வழிபட வேண்டும். அடுத்ததாக வாராஹி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு நம்முடைய நீண்ட நாள் வேண்டுதல் என்னவோ கோரிக்கை என்னவோ எந்த செயல் தடைபட்டு நின்று கொண்டு இருக்கிறதோ அதை கூறி முழுமனதோடு வழிபாடு செய்துவிட்டு அந்த முடிச்சை அப்படியே வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து விடுங்கள்.
தீபம் ஏற்றி வைத்து வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த விரலி மஞ்சள் முடிச்சை தீபத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு வாராகி அம்மனின் மந்திரமான “ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த முடிச்சு ஐந்து நாட்கள் அப்படியே இருக்கட்டும். ஐந்தாவது நாள் அதாவது டிசம்பர் மாதம் 23ஆம் தேதி இந்த முடிச்சை பிரித்து அதில் இருக்கக்கூடிய மஞ்சளை எடுத்து நாம் எப்பொழுதும் சமையலுக்கு உபயோகப்படுத்துவது போல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:தொண்டை வலிக்கு பரிகாரம்
இந்த முறையில் நாம் மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனின் அருளால் தடைப்பட்டு இருக்கக்கூடிய அனைத்து விதமான செயல்களும் தடையின்றி நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.