வீட்டில் சமைக்கும் போது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிக அக்கறை எடுத்து செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது. பெரியவர்கள் ஓரளவிற்கு இருப்பதை சாப்பிட்டு விடுவார்கள். குழந்தைகள் அப்படி அல்ல, அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் சமைக்க வேண்டி இருக்கிறது. இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மிகவும் வித்தியாசமான உணவுகளை தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்த ரெசிபியும் அப்படி தான் உங்கள் வீட்டில் மீதமாகும் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை வைத்து இதை செய்து விடலாம். ஆனால் இதை எதில் செய்தோம் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு வித்தியாசமாக செய்வது எப்படி என்பதை தான் இந்த குறிப்பில் தெரிந்து கொள்ள போகிறோம்.
இதற்கு உங்கள் வீட்டில் மீந்த சப்பாத்தி, பரோட்டா எதுவாயிருந்தாலும் அதை மிக்ஸியில் சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் தேங்காய் துருவல் போல, பூ பூவாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு இதை மிக்ஸியில் சேர்த்து ஒரு இரண்டு முறை சுற்றி விட்டால் போதும் இப்படி உதிரி உதிரியாக பூப் போல கிடைத்து விடும். இதை அப்படியே ஒரு பவுலில் தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.
இரண்டு பெரிய வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு நல்ல பழுத்த தக்காளி எடுத்து அதையும் பொடிப் பொடியாக நறுக்கி அனைத்தையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் பேனை வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த டிஷ் செய்ய கொஞ்சம் எண்ணெய் அதிகமாக சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். எண்ணெய் காய்ந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்து வெங்காயத்தை சேர்த்து நல்ல பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள், அதன் பிறகு பச்சை மிளகாயும், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதங்கிய பிறகு,தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளியும் நன்றாக வதங்கி இவை எல்லாம் ஒன்றாக கலந்து கொஞ்சம் வதங்கிய பிறகு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் மஞ்சள், அரை டீஸ்பூன் உப்பு என இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக மசாலாவின் பச்சை வாடை போகும் வரை அடுப்பை லோ ஃளேமில் வைத்து கலந்து விடுங்கள். இதில் பச்சை வாடை போன பின் மிக்ஸியில் போட்டு எடுத்து வைத்த பரோட்டாவை இதில் சேர்த்து கலந்து ஒரு தட்டு வைத்து மூடி விடுங்கள்.
இந்த டிஷ்ஷிற்கு செய்வதற்கு தண்ணீர் ஊற்ற தேவையில்லை. உங்களுக்கு மிகவும் ட்ரையாக இருப்பது போல தோன்றினால் மட்டும் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள் போதும்.
பத்து நிமிடம் கழித்து எடுத்தால் இந்த மசாலாவுடன் பரோட்டாக்கள் கலந்து கிட்ட தட்ட கொத்து பரோட்டா போல இருக்கும். கொத்து புரோட்டாவிற்கு கடையில் சால்னா போன்றவை எல்லாம் ஊற்றி அதன் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இதையே இன்னும் வித்தியாசமாக செய்வதாக இருந்தால் மசாலாக்களை சேர்க்கும் போது இரண்டு முட்டையை உடைத்து இதில் ஊற்றி, அதையும் நன்றாக கலந்த பிறகு உதிர்த்து வைத்து பரோட்டாவை சேர்த்தால் முட்டை பரோட்டா போலவே இருக்கும்.
உங்களின் விருப்பம் எப்படியோ அதைப் போல இந்த டிஷ் செய்து கொடுக்கலாம். முட்டை சேர்த்து கொடுக்கும் போது இதன் ஃப்ளேவர் இன்னுமே கூட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இது போல செய்து கொடுங்கள். இரவு மீ ந்த சப்பாத்தி பரோட்டா போன்றவற்றை அடுத்த நாளும் அப்படியே கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட சிரமப்படுவார்கள். இப்படி வித்தியாசமான முறையில் செய்து கொடுக்கும் போது அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் பொருள்களும் வீணாகாது.