வீட்டில் காய்கறி இல்லை என்றாலும் கவலை வேண்டாம். சூப்பரான இந்த குழம்பை வச்சு பாருங்க! ஒரு நொடியில் சாப்பாட்டுபானை காலியாகிவிடும்.

kuzhambu
- Advertisement -

சொன்னா நம்பவே மாட்டீங்க, நீங்களே உங்கள் கைகளால் சமைத்து, சுவைத்து, பார்த்தால் தான் தெரியும், இந்த குழம்பின் வாசமும் சுவையும். அந்த அளவிற்கு இந்த குழம்பு சூப்பரா இருக்கும். வீட்டில் காய்கறி இல்லாவிட்டாலும், வீட்டில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை, அரைத்து மிளகு சேர்த்த புளிக்குழம்பு காரசாரமாக எப்படி வைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகின்றோம். இந்த குழம்பை வைத்து விட்டு சுடச்சுட சோறு வடித்துவிட்டால் போதும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல்! அவ்வளவு தான், எல்லா சாப்பாடும் வயிற்றுக்குள் எப்படி போனது என்பதே தெரியாமல் போய்விடும். குறிப்பை படித்துவிட்டு ஒருவாட்டி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

kuzambu

Step 1:
முதலில் ஒரு சிறிய எலுமிச்சைப் பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புளியைக் கரைக்க வேண்டாம். அரை மணி நேரம் அப்படியே ஊறட்டும்.

- Advertisement -

Step 2:
அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து நன்றாக காய விட வேண்டும். அந்த கடையில் கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 3, சீரகம் – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வெந்தயம் – 1/4 ஸ்பூன், இவைகளை வறுத்து எடுக்க வேண்டும். சிவக்க வறுக்க வேண்டும். வாசம் வரும் அளவிற்கு வறுக்க வேண்டும். ஆனால் காந்த விடக்கூடாது. எண்ணெய் ஊற்றக் கூடாது. வறுத்து எடுத்த இந்த மசாலா பொருட்களை, ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

dry-fry

அடுத்ததாக அதே கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தேங்காய் துருவல் சேர்த்து, வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் சிவப்பு நிறமாக மாற கூடாது. அதே சமயம் தேங்காய் ஈரப்பதத்தோடு இருக்கக்கூடாது. மிதமான தீயில் வைத்து வறுத்து  எடுத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 3:
இப்போது வறுத்தெடுத்த மசாலா பொருட்களையும், தேங்காயையும் மிக்ஸி ஜாரில் போட்டு, ஊற வைத்திருக்கும் புளியை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு, நைஸ் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். புளியை ஊற வைக்க தண்ணீரை ஊற்றி இருப்பீர்கள் அல்லவா, அந்த தண்ணீரை மிக்ஸி ஜாரில் ஊற்றி அரைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த குழம்பினுடைய ஸ்பெஷாலிட்டியே இதுதாங்க, அந்த புளியை கரைத்தெல்லாம், புளி தண்ணீரை மட்டும் ஊற்றக்கூடாது. ஊற வைத்த புளியை அப்படியே போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

puli-karaisal

Step 4:
அடுத்ததாக ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு, கடுகு அல்லது வெங்காய வடகம் தாளித்துக் கொள்ள வேண்டும். 15 பல் சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து, நன்றாக வதக்கி, ஒரு கொத்து கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சேர்த்து அடுத்தபடியாக 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளையும், சேர்த்து ஒரு வதக்கு வதக்கி விட்டு, அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை கடாயில் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு, குழம்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன், சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். தக்காளி சேர்க்காமலேயே இந்த குழம்பிற்கு ருசி அதிகம். (உங்களுக்கு தக்காளி புளிப்பு பிடிக்கும் என்றால், வெங்காயம் சேர்க்கும்போது ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

இந்த குழம்பில், புளியின் பச்சை வாடை போகும் அளவிற்கு கொதித்து, அதில் ஊற்றியிருக்கும் எண்ணெய் பிரிந்து, வெளியே வரும் அளவிற்கு சுண்ட வேண்டும். குழம்பு சுண்டி, எண்ணெப் பிரிந்து வந்தவுடன், அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விடுங்கள். குழம்பு தயார் ஆக மொத்தமாக 20 நிமிடங்களுக்கு மேல் எடுக்கும். இட்லி தோசை, சில பேர் சப்பாத்திக்கு கூட, இந்த குழம்பை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்வார்கள். இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் இந்த குழம்பு கெட்டுப் போகாது. ஃபிரிட்ஜில் கூட வைக்க வேண்டாம். உங்கள் வீட்டில் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இதன் ருசி உங்கள் நாக்கில் ஒட்டிக்கொள்ளும். திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே
இதுவரைக்கும் பூக்கவே பூக்காத பன்னீர் ரோஜா செடியில் கூட பூ பூக்க சின்னசின்ன டிப்ஸ்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -