ஊரே மணக்கும் பாரம்பரியமான மிளகு ரசம் 10 நிமிடத்தில் வைப்பது எப்படி?

milagu-rasam
- Advertisement -

ரசம் வகைகளில் மிளகு ரசம் என்பது அனைவருக்குமே மிகவும் பிடித்தமான மற்றும் ஆரோக்கியமான ஒரு வகையாக இருக்கின்றது. உடல் நிலை சரியில்லாத நேரங்களில் இப்படி ஒரு மிளகு ரசம் செய்து கொடுத்தால் சோர்வாக இருந்த நோயாளிகள் கூட சுறுசுறுப்பாக எழுந்து அமர்ந்து விடுவார்கள். சளி, கபம், தலைவலி, ஜலதோஷம், ஜுரம், உடல் வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை புண் என்று நீங்கள் எந்த வகையில் அவதிப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் ஒருமுறை இந்த ரசத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள், எல்லாம் எங்கு மாயமாகப் போகும் என்றே தெரியாது! பாரம்பரியமான முறையில் மிளகு ரசம் வைப்பது எப்படி? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Milagu-1

‘மிளகு ரசம்’ செய்ய தேவையான பொருட்கள்:
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவிற்கு
பச்சை மிளகாய் – ஒன்று

- Advertisement -

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவிற்கு
தக்காளி – 2
பூண்டு பற்கள் – 7
கறிவேப்பிலை – 2 கொத்து

Milagu benefits in Tamil

தாளிக்க:
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவிற்கு
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
வர மிளகாய் – 2

- Advertisement -

‘மிளகு ரசம்’ செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து கொட்டைகள், திப்பிகள் இன்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு பழுத்த தக்காளி பழங்களை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகு மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் தோலுடன் இருக்கும் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கொரகொரவென்று நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

milagu-rasam

பின்னர் புளித் தண்ணீருடன் இந்த கலவையை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். தக்காளியின் சாறு முழுவதும் புளி தண்ணீரில் இறங்கி வர, அந்த பக்கம் அடுப்பை பற்ற வையுங்கள். அதில் வாணலி ஒன்றை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் வெந்தயம் மற்றும் வரமிளகாயை கிள்ளி போடுங்கள். பின்னர் அதில் தேவையான அளவிற்கு பெருங்காயத்தை தூவி கொள்ளுங்கள். அதில் கரைத்து வைத்துள்ள புளி கலவையை சேர்த்து கொஞ்சம் கறிவேப்பிலை இலைகள் மற்றும் மல்லித் தழைகளை பொடி பொடியாக நறுக்கி மேலே தூவி கொள்ளுங்கள்.

milagu-rasam2

ரசம் கொதித்து வரும் வரை அங்கேயே நில்லுங்கள். மிளகு ரசம் அதிகமாக கொதித்து விடக்கூடாது. நுரை போல ஓரங்களில் எழும்பி வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும். சாதாரண ரசம் ஹோட்டல் ரசம் போல சுவையுடன் கூடியதாக மாற சிறிதளவு வெல்லத்தை சேர்ப்பது வழக்கம் ஆனால் மிளகு ரசத்தில் வெல்லம் சேர்க்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி காரசாரமாக மிளகு ரசத்தை சாப்பிடும் பொழுது நமக்கு உடம்பில் ஒரு உற்சாகம் பிறக்கும். நீங்களும் இப்படி பாரம்பரியமான முறையில் மிளகு ரசம் வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடலாமே!

- Advertisement -