வரும் ஞாயிற்றுக்கிழமை(9/5/2021) அன்று விசேஷமான பிரதோஷம்! துன்பங்கள் நீங்க இதை செய்ய தவற விட்டு விடாதீர்கள்!

sivan-nandhi-pradosham

சிவனை வழிபட வேண்டிய உகந்த பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று வந்தால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். புதிதாக பிரதோஷ விரதம் இருப்பவர்கள் பொதுவாக சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் துவங்குவது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பது நியதி. பகல் பொழுது முழுவதும் உபவாசமிருந்து மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோவிலுக்கு சென்று ஈசனை தரிசித்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அத்தகைய பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டியது என்னவெல்லாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

parkadal

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளிவந்து அனைவரையும் அச்சுறுத்தியது. அவர்களை காக்க ஈசன் ஆலகால விஷத்தை உண்டது அனைவரும் அறிந்த புராண கதை. எத்தகைய தவறு அவர்கள் செய்திருந்தாலும் தன்னை சரண் அடைந்த உடன் ஈசன் அவர்களைக் காப்பாற்ற சற்றும் தயங்காமல் ஆலகால விஷத்தை உண்டார். மூவுலகையும் காக்க இவ்வாறு அவர் செய்த அந்த காலம் தான் பிரதோஷ காலமாக இன்று வரை வழிபட்டு வருகின்றோம்.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷமானது வளர்பிறை மற்றும் தேய்பிறை காலத்தில் இரண்டு முறை வருவது உண்டு. சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பும், பின்பும் இருக்கும் காலம் தான் பிரதோஷ காலம் எனப்படும். அதாவது மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலான காலத்தை பிரதோஷம் காலமாக கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஈசனுடைய மந்திரங்களை உச்சரிப்பது, கோவிலுக்கு சென்று ஈசன் வழிபாடு செய்வதும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

pradosham

மாதம் இருமுறை வரும் பிரதோஷ காலம் 20 வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானது. பிரதோஷ காலத்தில் நந்தி பகவானை வழிபடுவது யோகத்தை கொடுக்கும். பிரதோஷ வேளையில் சிவ மந்திரம் மட்டுமல்லாமல், நந்தி பகவானையும் வணங்குவது அனைத்து துன்பங்களையும் போக்கவல்லதாக அமையும்.

அனைத்து சிவன் கோவில்களிலும் அன்றைய தினத்தில் விசேஷமான பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். பிள்ளை இல்லாதவர்கள் இந்த விரதம் இருந்து வழிபட்டால் பிள்ளை வரம் நிச்சயம் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொருவரின் பிரச்சனைக்கும் தீர்வுக்கான பிரதோஷ காலத்தில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இது நடைபெறும் பூஜையில் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டங்களை பெறலாம்.

சிவனுக்கு வாங்கிக் கொடுக்கும் அபிஷேகப் பொருட்களில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. நோய்கள் அகல அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். சுற்றியிருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவும், எதிர்ப்புகளை மறைய செய்யவும் சர்க்கரை வாங்கி கொடுக்கலாம். உடல் பலம் பெற தேன் வாங்கி கொடுக்கலாம். செல்வம் மென்மேலும் பெருக பஞ்சாமிர்தம் வாங்கி கொடுக்கலாம். நல்ல வாழ்வு அமைய எண்ணெய் தானம் செய்யலாம். இளநீர் வாங்கி கொடுக்க பிள்ளை வரம் கிடைக்கும். மகசூல் பெருக பழங்களும், சக்திகள் பெருக சந்தனமும், வளங்கள் சேர தயிரும், முக்தி கிடைக்க நெய்யும் வாங்கிக் கொடுக்கலாம். அனைத்து பலன்களும் பெற வரும் ஞாயிறு அன்று சிவ வழிபாடு செய்ய மறக்காதீர்கள்.