முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கத் தான் செய்யும். ஆனால் ஆசைப்பட்டபடி முடி வளர கெமிக்கல் நிறைந்த எதுவும் நிரந்தரமான தீர்வை கொடுக்காது. அது எல்லாம் தற்காலிகமான தீர்வாகவே இருக்கும். அது மட்டுமின்றி அது வேறு பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடும். இதுவே இயற்கையான முறையில் இந்த எண்ணெயை தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால், இந்த முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகளை தடுப்பதுடன், நீளமான கருத்த கூந்தலையும் பெற முடியும். இந்த அழகு குறிப்பு பதிவில் நீண்ட அழகிய கருங்கூந்தலை பெற தேவையான அந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முடி வளர தேவையான எண்ணையை தயார் செய்யும் முறை:
சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 250 கிராம், வேம்பாளம் பட்டை 20 கிராம், செம்பருத்தி பூவை பறித்து நன்றாக நிழலில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு கைப்பிடி அளவு, நான்கு முழு நெல்லிக்காய் சின்ன சின்ன துண்டுகளாக அறிந்து அதையும் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் வெட்டி வேர் 20 கிராம் இவை அனைத்தையும் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஒரு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள். ( இவையெல்லாம் தனித்தனியாக உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் மொத்தமாக நாட்டு மருந்து கடைகளில் கூட கிடைக்கும்.)
இந்த எண்ணெயிலே 50 கிராம் பாசிப்பருப்பும், 50 கிராம் வெந்தயமும் சேர்த்தால் முடி வளர்ச்சியை எது மேலும் அதிகரிக்கும். ஆனால் உடல் அதிக குளுமை தன்மை உடையவர்கள் இந்த இரண்டு பொருள்களை தவிர்த்து விடுவது நல்லது.
இவையெல்லாம் சேர்த்த பிறகு இந்த எண்ணையை ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் இதை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் மாற்றிக் கொள்ளுங்கள். இதை வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை அப்படியே கூட பயன்படுத்தலாம். இந்தக் கண்ணாடி பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய் சூரிய ஒளியில் இரண்டு நாட்கள் வைத்து எடுக்க வேண்டும். இதை காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு பத்து மணி வரை வைக்கலாம், அதன் பிறகு மாலை இரண்டு மணிக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி இரண்டு நாள் வைத்து எடுத்தால் போதும் சூரிய ஒளிக்கதிர்களில் உள்ள சத்தும் இந்த எண்ணெயில் சேர்ந்து விடும்.
நீங்கள் தலைக்கு எப்போதும் இந்த எண்ணெய்யே தேய்த்து வந்தால், வேர்க்கால்களில் உள்ள இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கி தலையில் ஏற்படும் பொடுகையும் நீக்குவதுடன், மற்ற எந்த விதமான முடி பிரச்சனைகள் இருந்தாலும் சரி செய்து, முடி நீளமாகவும் கருகரு என்று வளரவும் உதவி செய்யும். அதுமட்டுமின்றி முடி உதிர்வை அறவே தடுத்து தலையில் நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரித்து இளநரையும் தடுக்கும் ஆற்றல் இந்த எண்ணெய்க்கு உண்டு.
இந்த பாட்டில் எண்ணெய் தீரும் பொழுது மறுபடியும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூரிய ஒளியில் வைத்து எடுத்து பயன்படுத்தலாம். இந்த எண்ணையின் நிறம் சிகப்பாக மாறாமல், தேங்காய் எண்ணெய் நிறத்தில் இருந்தால் இதில் உள்ள பொருட்களை எல்லாம் மறுபடியும் புதிதாக மாற்றி பயன்படுத்துங்கள்.
இது போல இயற்கையான முறையில் நாமே வீட்டில் தயாரித்த எண்ணெய் பயன்படுத்தும் போது முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனையும் தீர்வதோடு, இந்த எண்ணையின் மூலம் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது. நீங்களும் இந்த எண்ணெய் உங்கள் வீட்டில் தயார் செய்து பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்.