முள்ளங்கியை வைத்து மிகவும் அற்புதமான சுவையில் ஒரு துவையலை செய்து கொடுத்தால் வீட்டில் இருக்கும் இட்லி, தோசை, சாதம் என்று அனைத்தும் காலியாகி விடும்.

mullangi thuvaiyal
- Advertisement -

சத்து மிகுந்த பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அதன் சுவையிலோ அல்லது மனத்திலோ ஏதாவது பிடிக்காமல் போய்விட்டால் அதை நாம் உண்ண மறுத்து விடுவோம். அப்படி பிடிக்காத காய்களில் முள்ளங்கியும் ஒன்று. ஒரு சிலரே இந்த முள்ளங்கியை விரும்பி சாப்பிடுவார்கள். பலரும் இதை விரும்ப மாட்டார்கள். ஆனால் முள்ளங்கியால் நம் உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் முள்ளங்கியை வைத்து எப்படி துவையல் செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முள்ளங்கியை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கக்கூடிய கல்லீரல், சிறுநீரகம், ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மலக்குடல் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படுகிறது. முள்ளங்கியால் இது சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இதில் அதிக அளவு நீர் சத்தும், நார் சத்தும் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

செய்முறை

முதலில் கால் கிலோ முள்ளங்கியை எடுத்து தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 50 கிராம் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் காய்ந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டும் லேசாக நிறம் மாறியதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மல்லி சேர்க்க வேண்டும். பிறகு 5 வர மிளகாய் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு வருத்த வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு இரண்டு கிண்டு கிண்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை அதில் சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கியின் நிறம் லேசாக மாறிய பிறகு சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வெந்த பிறகு அதில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை போட்டு ஒரு நிமிடம் அடுப்பில் நன்றாக வதக்க வேண்டும். இதையும் எடுத்து ஆற வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் வறுத்து ஆற வைத்திருக்கும் பருப்பு வகைகளை போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வதக்கி வைத்திருக்கும் முள்ளங்கியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக அரைபட்ட பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி விட வேண்டும்.

இப்பொழுது துவையலை தாளிப்பதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். அது நன்றாக காய்ந்த பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு போன்றவற்றை சேர்க்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்த பிறகு அதில் ஐந்து பல் பூண்டை நன்றாக தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு லேசாக சிவந்த பிறகு அதில் கருவேப்பிலையை போட வேண்டும். கருவேப்பிலை நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் துவையலில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இட்லி தோசைக்கு சுண்டக்காயை வைச்சி கொஞ்சம் கூட கசப்பே இல்லாத மாதிரி டேஸ்டான இந்த சட்னியை செய்து கொடுங்க. இது சுண்டைக்காயில் செய்தது தான் என்று சொன்னாலும் யாரும் நம்பவே மாட்டார்கள்.

இந்தத் துவையலை நாம் சாதத்தில் அப்படியே போட்டு சாப்பிடலாம். இட்லி, தோசை என்று டிபன் வகைகளுக்கும் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். இந்த முள்ளங்கியை நம் உணவில் ஏதாவது ஒரு ரூபத்தில் சேர்த்து அதில் இருக்கும் சத்துக்களை பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

- Advertisement -