நினைத்த காரியம் நினைத்தபடி நடக்க வேண்டும், ஒரு காரியம் நல்லவிதமாக நடந்தேற வேண்டும், வைத்த கோரிக்கை எளிதில் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பல தெய்வங்களுக்கு 48 நாட்கள் என்ற முறையில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதே முறையில் முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் எப்படி வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவைப்படக்கூடிய மிகவும் முக்கியமான விஷயங்களாக சில விஷயங்கள் இருக்கின்றன. அவை தான் நாம் இருக்கும் இடம் அதாவது சொந்தமாக வீடு மனை வாங்குவது, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், வேலை கிடைப்பது. இந்த அனைத்து விதமான காரியங்களுக்கும் முக்கியமான காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் ஜாதகத்தில் சிறப்பாக இருக்கும் பொழுது அவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், கடன் பிரச்சினை எதுவுமே இருக்காது.
இதுவே செவ்வாய் பகவானால் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் இவை அனைத்துமே சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கும். இப்படி சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் இவை அனைத்தும் சரியாக வேண்டும் என்றாலோ அல்லது தங்களுக்கு இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றாலோ முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை யார் செய்கிறார்களோ அவர்களுக்கு சந்திராஷ்டமும் இல்லாத நாளாக பார்த்து தான் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை போன்ற தினங்களில் தொடங்குவது போல் பார்த்துக் கொள்வது என்பது மிகவும் சிறப்பு. என்றைக்கு நாம் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கிறோமோ அன்றைய தினம் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தலையில் நல்லெண்ணெய் அல்லது சிறிது எள் வைத்து தலைக்கு குளித்துவிட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகனின் படத்தை எடுத்து சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு ஒரு சிறிய மனப்பலகை போட்டு அதற்குமேல் முருகரின் படத்தை வைக்க வேண்டும்.
பிறகு அவருக்கு செவ்வரளி மலர்களை மாலையாக தொடுத்து அல்லது உதிரியாகோ அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு அவருக்கு பிடித்த நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம், தினை மாவு தேன் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை முதல் நாள் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற நாட்களில் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து வழிபாடு செய்யலாம். இவ்வாறு நெய்வேத்தியம் வைத்தபிறகு முருகனின் மூல மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம் அல்லது கந்த சஷ்டி கவசத்தை மூன்று முறை பாராயணம் செய்யலாம் அல்லது கந்தர் அனுபூதியை இரண்டு முறை பாராயணம் செய்யலாம்.
இதில் எதை உங்களால் செய்ய முடியுமோ அதை நிறுத்தி நிதானத்துடன் முருகப்பெருமானுக்கு முன்பாக அமர்ந்து படிக்க வேண்டும். இவ்வாறு படித்து முடித்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி கற்பூரம் எரிந்து கொண்டு இருக்கும் பொழுதே நீங்கள் முருகப்பெருமானிடம் என்ன வேண்டுதல் வைத்திருக்கிறீர்களோ அந்த வேண்டுதலை கூறிவிட்டு அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக நான் இந்த வழிபாட்டை செய்கிறேன். இந்த வழிபாட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை மன்னித்து என்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று மானசீகமாக முருகப்பெருமானிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். இப்படி தினமும் பாராயணம் செய்து முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே ஆடி மாத கரிநாள் சிறப்பு
மிகவும் எளிமையான இந்த முருகப்பெருமான் வழிப்பாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்களுடைய கோரிக்கை நிறைவேறுவதோடு முருகப் பெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.