சத்தான பொருட்களை நம்முடைய குழந்தைகள் எப்போதுமே விரும்பி சாப்பிட மாட்டார்கள். சக்தி நிறைந்த காய்கறிகளுக்கு எப்போதுமே சுவை குறைவாக தான் இருக்கும். அந்த வரிசையில் முருங்கைக்கீரை பொரியல் என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் சரி, சிறியவர்களும் சரி, விருப்பமாக சாப்பிட பிடிக்காது. ஆனால் அதே முருங்கைக்கீரையை அரைத்து இப்படி தோசை வார்த்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். க்ரீன் தோசை வேணும் வேணும் என்று சொல்லுமளவிற்கு இதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். சொல்லவே வேணாம். உடல் ஆரோக்கியத்திற்கு முருங்கை கீரை எவ்வளவு முக்கியம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாமா.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் – 2, தோல் உரித்த பூண்டு பல் – 2, முருங்கைக்கீரை – 1 கைப்பிடி அளவு பொட்டு, 2 வதக்கு வதக்கி மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சேர்த்து மீண்டும் முருங்கைக்கீரையை ஒரு நிமிடம் போல வதக்கினால் போதும். கீரை வெந்து விடும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கீரையை நன்றாக ஆற வைத்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு தோலுரித்த – 2 பல் சின்ன வெங்காயத்தை சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இதை விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த விழுது அப்படியே இருக்கட்டும்
6 தோசை சுடும் அளவிற்கு, தோசை மாவை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் முருங்கைக் கீரை விழுதை ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். முருங்கைக் கீரை தோசை சுட சூப்பரான கிரீன் மாவு தயார். (மாவில் இருக்கும் உப்பே நமக்குப் போதுமான தாக இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் 2 சிட்டிகை உப்பு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.)
அடுப்பில் எப்போதும் போல தோசைக்கல்லை வைத்து கொள்ளுங்கள். தோசைக் கல் சூடானதும் மொரு மொரு தோசை எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் இந்த தோசையை வார்த்து மேலே எண்ணெய் ஊற்றி சிக்கவைத்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். தொட்டுக்கொள்ள உங்கள் விருப்பம் போல சாம்பார் சட்னி எதை வைத்துக் கொண்டாலும் சரி தான்.
இந்த தோசை மணக்க மணக்க ஒரு விதமான வாசத்துடன் சாப்பிடுவதற்கு அத்தனை ருசியாக இருக்கும். முருங்கைக் கீரையை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்த திருப்தியும் நமக்கு கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இப்படி விதவிதமான தோசையை சுட்டு கொடுத்தால் வீட்டில் இருப்பவர்களிடம் பாராட்டையும் பெற முடியும்.
முருங்கை கீரையை முன்கூட்டியே சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் நிச்சயமாக பத்தே நிமிடத்தில் இந்த தோசை ரெசிபியை தயார் செய்துவிடலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.