முருங்கைக்காய் வாங்கின ஒரு முறை இப்படி செஞ்சு வச்சுக்கோங்க. இனி மூணு மாசத்துக்கு சைட் டிஷ் செய்யணும்ன்ற பிரச்சனையே கிடையாது. இட்லி, பூரி, சப்பாத்தி, சாதம் என எல்லாத்துக்குமே இது ஒன்னே போதும்.

drumstick pickle
- Advertisement -

இப்போது முருங்கைக்காய் சீசன் தொடங்கி விட்டது. அனைத்து இடங்களிலும் முருங்கைக்காய் மிகவும் மலிவாகவே கிடைக்கிறது. இந்த நேரத்தில் முருங்கைக்காய் வாங்கி இது போல செய்து வைத்துக் கொண்டால் மூன்று மாதத்திற்கு வீட்டில் சைட் டிஷ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவிற்கு சுவையான ஒரு முருங்கைக்காய் ரெசிபி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

முதலில் அரை கிலோ முருங்கைக்காய் வாங்கி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து மேலே இட்லி தட்டில் எந்த நறுக்கிய முருங்கை காய்களை வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் வரை வேக விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு மற்றொரு புறம் அடுப்பில் இன்னொரு கடாயை வைத்து அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து சிவந்து வந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து நன்றாக பொரிந்த உடன் அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்த பிறகு, மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது முருங்கைக்காய் முழுவதுமாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு முருங்கை காய்களை வெளியில் எடுத்து சூடு ஆறும் வரை பொறுத்திருங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூனை வைத்து முருங்கைக்காயின் உள்ளிருக்கும் சதை பகுதிகளை தனியாக வழித்தெடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரே ஒரு சுற்று மட்டும் விட்டு எடுத்து விடுங்கள். இதை அதிக பைன் பேஸ்டாக அரைக்க கூடாது.

- Advertisement -

இப்போது அடுப்பில் அடி கனமான ஒரு கடாய் வைத்து அதில் 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரித்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி நிறைய உரித்த பூண்டை ஒன்றும் பாதியுமாக நசுக்கி அதையும் இந்த எண்ணெயில் சேர்த்து பூண்டு சிவந்து வரும் வரை வதக்க வேண்டும். இப்போது நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் முருங்கைக்காய் விழுதை சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, நாலு ஸ்பூன் மிளகாய் தூள் என அனைத்தையும் சேர்த்து முருங்கைக்காயுடன் வதக்க வேண்டும். இதன் பச்சை வாடை முழுவதுமாக நீங்கியவுடன் ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு புளியை எடுத்து கரைத்து அதையும் இதில் ஊற்றி இவையெல்லாம் நன்றாக வதங்கி எண்ணெய் பிரியும் வரை காத்திருங்கள்.

இதையும் படிக்கலாமே: அட 1 கப் பச்சரிசியை வைத்து இவ்வளவு மொறுமொறுப்பாக, இவ்வளவு ஆரோக்கியமாக போண்டா செய்ய முடியுமா என்ன? இத்தனை நாளா இந்த ரெசிபி தெரியாமல் போய்விட்டதே?

கடைசியாக ஒரு ஸ்பூன் வெல்லத்தை தூள் செய்து மேலே தூவி ஒரு முறை நன்றாக கலந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த முருங்கைக்காய் ஊறுகாய் சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி தோசை சப்பாத்தி என எல்லா வகையானவற்றுக்கும் வைத்துக் கொள்ள ரொம்ப சுவையான சைட் டிஷ் ஆக இருக்கும்.

- Advertisement -