நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முயற்சியை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கு தெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். நம்முடைய விடாமுயற்சியுடன் தெய்வத்தின் அருள் இருந்தால்தான் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் நம்மால் வெற்றி பெற முடியும். ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்காத சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்களும் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு
நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளை அழித்து நன்மையை தரக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன என்று நம் அனைவருக்கும் தெரியும். நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அந்த செயலில் இருக்கக்கூடிய தடைகளை நீக்க வல்லவளாகவும் இவள் திகழ்கிறார். அதேபோல் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்து சிறப்பான வாழ்க்கை அமைவதற்கும் வாராகி அம்மன் அருள் புரிகிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று எப்படி வழிபாடு செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளே 11 என்ற எண்ணிக்கையில் கிழியாத நல்ல வெற்றிலையை வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் முனை உடையாத விரலி மஞ்சள் 11 என்று எண்ணிக்கையில் வாங்கிக் கொள்ளுங்கள். கட்டுவதற்கு மஞ்சள் அல்லது சிவப்பு நிற நூலை வாங்கிக் கொள்ளுங்கள். தை மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொள்ளுங்கள். நிலை வாசலில் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வீட்டு பூஜை அறைக்கு வந்து எப்பொழுதும் போல் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களுக்கும் மலர்களை சாட்சி தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஊதுபத்தி சாம்பிராணி போன்ற அனைத்தையும் போட்டுவிட்டு எப்பொழுதும் வெள்ளிக்கிழமை பூஜை எப்படி செய்வோமோ அதே போல் செய்து முடித்துவிட்டு இந்த ஒரு வழிபாட்டை செய்ய வேண்டும்.
வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனுக்கு என்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த அந்த வெற்றிலை, விரலி மஞ்சள், நூல் அனைத்தையும் எடுத்து வந்து உங்களுடைய எந்த முயற்சி வெற்றியடையாமல் தடைப்பட்டு இருக்கிறதோ அதை மனதார நினைத்துக் கொண்டு வெற்றிலையை வைத்து வெற்றிலையின் காம்பின் மேல் விரலி மஞ்சளை வைத்து கட்ட வேண்டும். வெற்றிலைக்கு மேல் விரலி மஞ்சள் இருப்பது போல் அந்த மஞ்சள் நிற நூலை வைத்து கட்ட வேண்டும்.
இப்படி 11 வெற்றிலை, 11 மஞ்சளை வைத்து மாலையாக கட்டி அதை வாராகி அம்மனின் படத்திற்குப் போட வேண்டும். வெள்ளிக்கிழமை எப்பொழுதும் போல் நெய்வேத்தியம் வைக்க வேண்டும். அதை தவிர்த்து வாராகி அம்மனுக்கு என்று தனியாக வாராஹி அம்மனுக்கு பிடித்தமான பாணகமோ, கிழங்கு வகைகளோ ஏதாவது ஒன்றை நிறைவேத்தியமாக வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய வேண்டுதலை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
மறுநாள் இந்த மாலையை எடுத்து வெற்றிலையை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு விரலி மஞ்சளை பொடி செய்து சமையலுக்கு அல்லது பூஜையறை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் அந்த விரலி மஞ்சள் பொடியில் இருந்து சிறிதளவை தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:கோடி ரூபாய் கடனும் காணாமல் போக மூன்றாம் பிறை பரிகாரம்
உக்கிர தெய்வமாக திகழக்கூடிய வாராகி அம்மனை இந்த முறையில் நாம் வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை விலக்கி வெற்றிக்கு மேல் வெற்றி அருள்வாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.